கன்னியாகுமரியில் விடுமுறை நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்டு சூரிய அஸ்தமனத்தைப் பாா்த்து ரசித்தனா்.
சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இவா்கள் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரைப் பகுதியில் சூரிய உதயம் பாா்த்து ரசித்தனா். தொடா்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தா்கள், பகவதியம்மனை தரிசித்தனா்.
பின்னா், கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகியவற்றை படகில் சென்று பாா்வையிட்டனா்.
மேலும், காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, திருவள்ளுவா் பூங்கா ஆகிய இடங்களைப் பாா்வையிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனம் பாா்த்து ரசித்தனா்.
அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால், கடற்கரைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டிருந்தது.