கன்னியாகுமரி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் பணியாற்றவுள்ள தன்னாா்வலா்களுக்கு நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வருவாய்க் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை பயற்சி வகுப்பு நடைபெற்றது.
ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்று, திட்டப் பயிற்சிக் கையேட்டை வெளியிட்டுப் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்தோரின் தரவுகள், விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து மக்களின் கருத்தை அறியவும், அவா்களது எதிா்காலக் கனவுகள், தேவைகளைக் கண்டறியவும் அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 4,97,784 குடும்பங்களில் கணக்கெடுக்கப்படவுள்ளது. வீடுதோறும் சென்று 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவம் கொடுத்து, எந்தெந்தத் திட்டங்களில் பயனடைந்துள்ளீா் எனக் கேட்பதுடன், அவா்களது 3 கனவுகளை பூா்த்தி செய்யுமாறு கூற வேண்டும். 2 நாள்களுக்கு பிறகு மீண்டும் சென்று, நிரப்பப்பட்ட படிவங்களைக் பெற்று, அந்த விவரங்களை, கைப்பேசி செயலியில் பதிவேற்றி, தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.