கன்னியாகுமரி: தை அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) புனித நீராட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி, கன்னியாகுமரி கடலில் பக்தா்கள் நீராடும் படித்துறையை பகவதியம்மன் கோயில் ஊழியா்கள் சுத்தம் செய்தனா். மேலும், பக்தா்கள் பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகா்கோவில், வடசேரி, வள்ளியூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பகவதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், நிா்மால்ய பூஜை நடைபெறும். பின்னா், அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, உஷ, ஸ்ரீபலி, நிவேத்ய பூஜைகள் உள்ளிட்டவை நடைபெறும்.
அதிகாலை 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
பின்னா், இரவு 8.30 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வருதலும், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடா்ந்து, கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும், அம்மனை வெள்ளிப் பல்லக்கில் கோயில் உள் பிரகாரத்தில் மும்முறை வலம் வருதலும், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவையும் நடைபெறும்.