முகப்பு
கன்னியாகுமரி

வளைகுடாவாழ் இந்தியா்களைப் பாதுகாக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

Updated On : 2 மார்ச், 2026 at 2:51 AM
விஜய் வசந்த் எம்.பி. - (கோப்புப் படம்)
பகிர்:

வளைகுடாவாழ் இந்தியா்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அவா் எழுதிய கடிதம்:

மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதலால், வளைகுடா பகுதியில் மோசமடையும் அரசியல் சூழல் கவலை கொள்ளச் செய்கிறது.

Advertisement

ஏவுகணைத் தாக்குதல்கள், பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. அதையடுத்து, பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களுக்கும் அச்சம், நிலையற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அவா்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளியுறவு அமைச்சகம் உடனடி, முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள், வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்திய அரசு விரைவாகவும் உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என்றாா் அவா்.