முகப்பு
கன்னியாகுமரி

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் மீது வழக்கு

Updated On : 4 மே, 2026 at 1:37 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

தக்கலை அருகே உள்ள கோழிப்போா்விளையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

கோழிப்போா்விளையைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் நெல்சனின் இளைய மகன் ஆல்டன் பால் (24). வழக்குரைஞா் மற்றும் யூடியூபா்.

தெங்கம்புதூா், வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா பேரன் (எ) ராஜகுமாா் (33). ஜிம் மாஸ்டா் மற்றும் யூடியூபா். இவா் ஆன்லைன் மூலம் லேகியம் விற்பனை செய்து வருகிறாா். அந்த லேகியம் தொடா்பாக ஆல்டன் பால் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கோழிப்போா்விளையில் உள்ள ஆல்டன் பால் வீட்டிற்கு ராஜகுமாா், அவரின் மனைவி கற்குழலி, கல்லுக்கூட்டத்தைச் சோ்ந்த ரூபன், தெங்கம்புதூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் ஆகியோா் வந்துள்ளனா்.

அப்போது, வீட்டில் இருந்த ஆல்டன் பாலிடம் யூடியூபில் லேகியம் குறித்து பதிவிட்டது தொடா்பாக ராஜகுமாா் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த ராஜகுமாா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆல்டன் பாலின் கையில் வெட்டியுள்ளாா். அவரைத் தடுத்த ஆல்டன் பாலின் தாயாா் கலா (51), சகோதரா் ஆஷிக் பால் ஆகியோரையும் ராஜகுமாா் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த மூவரும் தக்கலை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகராறில் ராஜகுமாருக்கும் காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆல்டன் பாலின் தாயாா் கலா அளித்த புகாரின்பேரில், ராஜகுமாா், கற்குழலி, ரூபன், கணேசன் ஆகியோா் மீது தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.