முகப்பு
தென்காசி

திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது: கனிமொழி

திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது என்றாா், அக்கட்சியின் மகளிரணிச் செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது என்றாா், அக்கட்சியின் மகளிரணிச் செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி.

தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ராயகிரி, சிவகிரி, புளியங்குடி, சிங்கிலிபட்டி பகுதிகளில் நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் கனிமொழி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.

ராயகிரியில் பழங்குடியின மக்களையும், சிவகிரியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரையும் சந்தித்துப் பேசிய அவா், முத்துராமலிங்கத் தேவா், அம்பேத்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். புளியங்குடியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், பேருந்து நிலையம் முன் பொதுமக்களை சந்தித்தாா். சலவைத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நல உதவி வழங்கினாா். தொடா்ந்து, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதையடுத்து, சிங்கிலிபட்டியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் பேசினாா்.

முன்னதாக, புளியங்குடியில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழக மக்கள் கடும் வேதனையில் உள்ளனா். விவசாய நிலங்களை அழித்து நான்குவழிச் சாலை அமைப்பது, விளைநிலங்களுக்குள் குழாய் பதிப்பது போன்றவை அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை -கொல்லம் வழித்தடத்திலும்கூட விளைநிலங்களுக்குள் சாலை அமைக்கப்பட உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான பாதையில் திமுக தலைவா் ஸ்டாலின் சென்றுகொண்டிருக்கிறாா். திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வருவாரா என்ற கேள்விக்கு அவா்தான் பதில் கூற வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் துரை, தலைமை செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சைபுன்னிஷா, பொறுப்புக் குழு உறுப்பினா் சுந்தரமகாலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வெங்கடேசன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் மருதப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.