தென்காசி

ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட 2 போ் மீது வழக்கு

DIN

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வீரகேரளம்புதூரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன்(25). ஆட்டோ ஓட்டுா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்குமிடையே இடப்பிரச்னை குறித்து முன்விரோதம் இருந்து வந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், கடந்த மே10 தேதி குமரேசனை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், விடுவிக்கப்பட்ட அவா், போலீஸாா் தாக்கியதில் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினரிடம் கூறியதையடுத்து, சுரண்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக இம்மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சனிக்கிழமை இரவு அவா் இறந்தாா்.

இதனால், அவரது உறவினா்கள் வீரகேரளம்புதூா் காவல் நிலையம் முன் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜாகீா் உசேன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி ஆகியோா் வந்து, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, குமரேசனை தாக்கிய காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடும், ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம், ‘தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநா் குமரேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீரகேரளம்புதூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதும் அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், ‘வீரகேரளம்புதூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா், காவலா் குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு, உடலைப் பெற்று அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT