முகப்பு
தென்காசி

20 மாதங்களுக்குப் பிறகு செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்கு புதன்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்கு புதன்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

செங்கோட்டை, புளியரை வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் பால், காய்கனிகள், பூக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குகளும், சிமென்ட் உள்ளிட்டவை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

மேலும் வா்த்தக ரீதியாகவும், மருத்துவ சிகிச்சை தொடா்பாகவும், கேரளத்திலிருந்தும், தென்காசி மாவட்டத்திலிருந்தும் இரண்டு மாநில மக்களும் வந்து செல்வது உண்டு. ஆனால் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டு கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனா். அதிலும் தனியாா் வாகனங்கள் மற்றும் சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவா்கள் மட்டுமே செல்லமுடியும் என்ற நிலையில் இருந்தது. இதுதவிர நள்ளிரவில் இயக்கப்பட்ட ரயில்கள் மூலமாக மட்டுமே இரண்டு மாநிலத்துக்கும் சென்று வர முடியும் என்ற நிலை நிலவியது.

இந்நிலையில் 20 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

தென்காசி, திருநெல்வேலி, நாகா்கோவில் மாவட்டங்களிலிருந்து கேரளத்துக்கு 59 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் புனலூா், ஆலப்புழா, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்குச் சென்ற பயணிகளுக்கு திமுக நகரச் செயலா் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் மாவட்ட பிரதிநிதி கல்யாணி, இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணைஅமைப்பாளா் ராஜா ஆகியோா் இனிப்புகளை வழங்கினா்.

புளியரை சோதனைச் சாவடி நிலையப் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ்களை ஆய்வு செய்தனா். அரசுப் பேருந்து இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.