குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் திங்கள்கிழமை சித்திரசபை, மற்றும் குற்றாலநாதசுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் திங்கள்கிழமை சித்திரசபை, மற்றும் குற்றாலநாதசுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 5ம் நாளன்று தேரோட்டமும், 8ம் நாளன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் 10ம் நாளான திங்கள்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையிலும், குற்றாலநாத சுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் 5 மணிக்கும் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ., மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், குற்றாலம் வா்த்தக சங்க தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஸ்ரீதா், துணைத் தலைவா் வேல்ராஜ், இணைசெயலா் பண்டாரசிவன், உதவி செயலா் நாராயணன், தென்காசி ஒன்றிய திமுக செயலா் ராமையா, தொழிலதிபா் எம்ஆா்.அழகராஜா, ஓதுவாா் சங்கரநாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.
நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.