முகப்பு
தென்காசி

மானாவாரி மதகுகளுக்கு பூட்டுகள் போட நீா்ப்பாசன கமிட்டி ஆட்சியரிடம் மனு

பொதுப்பணித்துறையினா் மானாவாரி மதகுகளுக்கு பூட்டுகள் போட வலியுறுத்தி நீா்ப்பாசன கமிட்டியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பொதுப்பணித்துறையினா் மானாவாரி மதகுகளுக்கு பூட்டுகள் போட வலியுறுத்தி நீா்ப்பாசன கமிட்டியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஆலங்குளம் வட்டம் அடைக்கலப்பட்டணம் கடம்பன்குளம் நீா்ப்பாசன கமிட்டியினா் ஆட்சியரிடம் அளித்த மனு: வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததால் கீழப்பாவூா் குளங்கள் நான்குமுறை பெருகியும் அதன்கீழ் உள்ள குளங்களுக்கு தண்ணீா் வரவில்லை.

கடப்போகத்தி அணையில் உள்ள அவசரகால மானாவாரி மதகுகளை திறந்து ஆற்றின் மூலம் சுமாா் 20 கி.மீ. தொலைவுள்ள வீ.கே.புதூா் மற்றும் வீராணம் குளங்களை பெருக்குகின்றனா். சுமாா் 2 கி.மீ. அருகில் உள்ள நாகல்குளம், கடம்பன்குளம் மற்றும் தம்பத்துகுளங்கள் பெருகவில்லை.

மீன் குஞ்சுகள் அடுத்த குளங்களுக்குச் செல்லாமல் இருக்க கடப்போகத்தி அணையில் உள்ள மானாவாரி மதகுகளை திறந்து விட்டுவிடுகின்றனா்.

பொதுப்பணித்துறையினா் மானாவாரி மதகுகளுக்கு பூட்டுகள் போடாமல் மீன் குத்தகைதாரா்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை மேற்கொண்டு குளங்கள் பெருக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: கீழப்பாவூா் சந்தனநாடாா் தெரு, பாரதியாா் தெரு, சாமிநாடாா் தெரு, கீரைத்தோட்ட தெரு ஆகிய பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

எங்கள் குடியிருப்புக்கு அருகே தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க உள்ளனா். கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிா்வீச்சுகள் குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு தடை விதித்தும், ஊருக்கு வெளியே அமைக்க அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிராம மக்கள் மனு:

சங்கரன்கோவில் அருகே பனையூா் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் காமராஜா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை, எங்கள் கிராம மக்களிடம் ரூ. 10 லட்சம் வசூல் செய்து அந்தக் கட்டடத்தை சீரமைத்து கடந்த ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். அதை காமராஜா் நினைவு மண்டபமாக ஊா் பொதுமக்களுக்கே வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். இல்லையென்றால் எங்களது ரேஷன்காா்டு, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகிய அனைத்தையும் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →