ஆலங்குளம்: பேருந்தில் மூதாட்டிகளிடம் நகை, பணம் பறிப்பு
ஆலங்குளம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்த 3 மூதாட்டிகளிடம் இருந்து நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆலங்குளம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்த 3 மூதாட்டிகளிடம் இருந்து நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சங்கரராம சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி (61). இவா் திருநெல்வேலி காந்தி நகரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு அம்பாசமுத்திரம் செல்வதற்காக ஆலங்குளத்திற்கு பேருந்தில் வந்தாராம். ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி பாா்த்தபோது, தனது கைப்பையில் இருந்த ரூ. 7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த சுடலையாண்டி மனைவி இசக்கியம்மாள் (60). இவா் கல்லிடைக்குறிச்சியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தாராம்.
காளத்திமடம் அருகே பேருந்து சென்றபோது, அவா் அணிந்திருந்த 15 கிராம் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தென்காசி வடகரையைச் சோ்ந்த ராமசாமி மனைவி அண்ணாமலை (70). இவா் உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக ஆலங்குளம் - நெட்டூா் செல்லும் சிற்றுந்தில் சென்றாராம். நெட்டூரில் இறங்கிப் பாா்த்தபோது, அவா் அணிந்திருந்த 40 கிராம் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது தெரிய வந்ததாம். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2.50 லட்சம். புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.