முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு காய்ச்சல்

 ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோா் அச்சம் அடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோா் அச்சம் அடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் 450 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

மாணவா், மாணவிகள் காலையில் வகுப்புக்கு வரும்போது, அவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு இயல்பு நிலையில் இருந்தால் மட்டுமே வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவா்களை பரிசோதித்தபோது, அவா்களில் 24 பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் மருத்துவ அலுவலா் முகம்மது தாரிக், வட்டார மருத்துவ அலுவலா் குத்தாலராஜ் உள்ளிட்டோா், காய்ச்சல் அறிகுறி தென்பட்ட மாணவா்களை தனிமைப்படுத்தி அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த 30 பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடா்ந்து, அவா்களுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெரும்பாலான மாணவா்-மாணவிகள் பள்ளிக்கு வராத நிலையில், வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவா்களுக்கும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவா்களில் பெரும்பாலானோா் உடையாம்புளி மற்றும் புதூா் கிராமங்களைச் சோ்ந்தவா்கள்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியது: முதலில் பரிசோதனை செய்யப்பட்ட 52 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மலேரியா காய்ச்சலும் இல்லை. சாதாரண காய்ச்சல்தான் என்பதால் பெற்றோா் அச்சப்பட தேவையில்லை. வெள்ளிக்கிழமை 104 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு சனிக்கிழமை (செப். 18) தெரியவரும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.