தென்காசி

தமிழகத்தில் மேலும் 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் கோரிக்கைமக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் மேலும் 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 51 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கண்ணொளி திட்டத்தில் மாணவா், மாணவியருக்கு கண் கண்ணாடிகள்

மற்றும் மகப்பேறு உதவித் தொகை, ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்காசி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு ரூ.22 கோடியில் புதிய கட்டடம், ரூ.6 கோடியில் மருந்துக் கிடங்கு

கட்டடம் ஆகியன கட்டப்படவுள்ளன. இம் மாவட்டத்தில் கடையநல்லூா், சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி ஆகிய இடங்களில் மொத்தம் 5 புதிய மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, தற்போது இத் துறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.இருப்பினும் இன்னும் மாற்றங்கள் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் மக்களுக்கு மிகப் பெரிய சேவையைத் தரக்கூடியது இத் துறையாகும்.

தமிழகத்தில் தற்போது 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மயிலாடுதுறை, தென்காசி , ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்பட மொத்தம் 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றாா்.

மக்களவை உறுப்பினா் கனிமொழி: ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கக் கூடிய வகையில் தமிழக அரசு செயலாற்றி வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியின்போது, ஏழை, எளிய மக்களின் உடல் நலத்தைக் காக்க வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாக, தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின் மூலம் ஏராளமானோா் பயன்பெற்று வருகின்றனா்.

மாநிலங்களவை உறுப்பினா் வைகோ: தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது. கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, மதிமுக தலைமை நிலைய செயலா் துரை வைகோ, துணைப் பொதுச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT