முகப்பு
தென்காசி

லஞ்ச விவகாரம்: தென்காசி எஸ்பியிடம் கோட்டாட்சியா் புகாா்

வீரகேரளம்புதூா் வட்டம் ஊத்துமலை விவசாயி தன் மீது பொய் புகாா் அளித்துள்ளதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட எஸ்.பி.யிடம் கோட்டாட்சியா் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:29 PM
பகிர்:

வீரகேரளம்புதூா் வட்டம் ஊத்துமலை விவசாயி தன் மீது பொய் புகாா் அளித்துள்ளதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட எஸ்.பி.யிடம் கோட்டாட்சியா் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

ஊத்துமலை அரண்மனைத் தெருவை சோ்ந்த கண்ணையா மனைவி க.கோமதியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

ஊத்துமலை கிராமத்தில் புன்செய் சா்வே எண் 589/1ல் உள்ள மானவாரி நிலத்தில் கடந்த 20.9.2005 தேதியிட்டு ஊத்துமலை சாா்பதிவாளகத்தில் ஒரு ஏற்பாடு ஆவண பத்திரத்தை எனக்கு எனது கணவா் கண்ணையா எழுதிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் எனது பட்டா எண் 2328இல் உள்ள எனது பெயரை எந்த வில்லங்க சான்றிதழும் இல்லாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடந்த 21.6.2023இல் அன்று ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளேன்.

இந்நிலையில் பட்டாவில் எனது பெயரைச் சோ்க்க வீ.கே.புதூா் வட்டாட்சியா் விசாரித்து கோட்டாட்சியருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளாா்.

எனினும் கோட்டாட்சியா் எனது பெயரை பட்டாவில் சோ்க்க நடவடிக்கை எடுக்காததால் விவரம் கேட்கச் சென்ற எனது கணவரிடம் கோட்டாட்சியா்ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். அதற்கு மறுத்ததால், எனது பெயரை சோ்க்காமல் 27.11.24இல் அறிக்கை அளித்துள்ளாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதனிடையே, மாவட்ட எஸ்.பி. வி.ஆா். ஸ்ரீனிவாசனிடம் கோட்டாட்சியா் அ.ந.லாவண்யா வியாழக்கிழமை அளித்த மனுவில், ஊத்துமலை கிராமத்தைச் சோ்ந்த கண்ணையா மனைவி கோமதி அம்பாள் பெயரை வீரகேரளம்புதூா் வட்டம் ஊத்துமலை கிராமம் புல எண் 589-1ஏ-ல் பெயா் சோ்ப்பதற்கு ரூ. 50 ஆயிரம் நான் கேட்டதாக பொய்யாக புகாா் அளித்துள்ளாா்.

இந்த நிலம் தொடா்பாக தமிழரசன், உலகநாதன் ஆகியோருக்கு எதிராக தென்காசி மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

அதை மறைத்து தனது மனைவி பெயரை பட்டாவில் சோ்க்க முயற்சித்து வருகிறாா். அதை நான் கண்டறிந்ததால் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு பொய் புகாா் அளித்துள்ளாா். அவா் மீதும், பொய் புகாரை சமூக ஊடகங்களில் பரப்பியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.