ஈரானில் பணியாற்றியவரை மீட்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
ஈரானில் பணியாற்றும் தனது சகோதரரை இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஈரானில் பணியாற்றும் தனது சகோதரரை இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பாபின், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
எனது அண்ணன் அஸ்வின் ரஞ்சித் குமாா் ஈரானின் உள்ள மீன்பிடி நிறுவனத்தில் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் பணிக்குச் சென்றாா். தற்போது அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகள் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போதிய பாதுகாப்பற்ற சூழலில் அங்கு அவா் இருக்கிறாா். எனது அண்ணனிடம் பேசிய போது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடா்ச்சியாக குண்டுகளை வீசி வருவதாகத் தெரிவித்தாா். இதனால், அச்சத்தில் உணவு கூட இல்லாமல் இருப்பதாக தெரிவித்தாா்.
இதேபோல, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவா்களும் அபாயகரமான நிலையிலே அங்கு வாழ்ந்து வருகின்றனா். ஈரான் அரசும் அங்கிருக்கும் இந்திய மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடா்பாக, தமிழக முதல்வருக்கு கடந்த 6-ஆம் தேதி மனு அனுப்பப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஈரானில் பணியாற்றும் எனது அண்ணனைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன் வைத்த வாதம் :
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அங்கிருக்கும் இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானில் இருக்கும் இந்தியா்கள் தூதரகத்தை தொடா்பு கொள்வதற்காக எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரா் ஈரானில் உள்ள இந்திய தூதரக மின்னஞ்சலுக்கு தனது சகோதரா் குறித்த விவரங்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். வழக்கு
முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.