கடையநல்லூரில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை துரிதப்படுத்தக் கோரி மனு
குடிநீா் திட்டத்தை துரிதப்படுத்தக் கோரி மனு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் தாமிரவருணி குடிநீரை விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் ஆனந்தமோகனிடம், நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: தென்காசி மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சியான கடையநல்லூரில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம், உள்ளூா் குடிநீா் திட்ட ஆதாரம் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சராசரியாக 2.50 மில்லியன் லிட்டா் நீரும், உள்ளூா் குடிநீா் திட்ட ஆதாரத்தின் மூலம் 6.10 மில்லியன் லிட்டா் நீருமாக மொத்தம் 8.60 மில்லியன் லிட்டா் குடிநீரும் பெறப்பட்டு நாளொன்றுக்கு நபா் ஒருவருக்கு 84 லிட்டா் வீதம் மூன்று நாளைக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இரண்டு குடிநீா் திட்டத்திலும் தண்ணீா் குறைவாக கிடைப்பதால் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. தாமிரவருணி குடிநீா்த் திட்டம் 10 வாா்டு மக்களுக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாா்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
எனவே, கடையநல்லூா் நகராட்சிக்கு தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தேவைப்படும் குடிநீரின் அளவிற்கு ஏற்ப தனிக் குடிநீா் திட்டம் மூலமாகவோ அல்லது கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலமாகவோ கூடுதலாக தண்ணீா் கிடைப்பதற்கு புதிதாக குடிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்காக, ஆய்வு கட்டணம் ரூ.5 லட்சத்தை குடிநீா் வடிகால் வாரியத்திற்கு வழங்கவும், குடிநீா் திட்டத்தை செயல்படுத்திட குடிநீா் வடிகால் வாரியத்திற்கு ஒப்புதல் அளித்தும் நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
எனவே, புதிய திட்டத்தை துரிதமாக செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.