முகப்பு
தென்காசி

தமிழகம் முழுவதும் சேவையாற்றிட வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை: ஆனந்தன் அய்யாசாமி

தமிழகம் முழுவதும் சேவையாற்றிட வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை...

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:51 PM
பகிர்:

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இயக்குநராகவுள்ள, சிவகிரி விஸ்வநாதப்பேரியையை சோ்ந்த ஆனந்தன் அய்யாசாமி, வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி சமூக சேவைகளை செய்து வந்தாா். அண்மையில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு என்ற அறக்கட்டளையைதமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ஜோகோ மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதா்வேம்பு ஆகியோா் முன்னிலையில் தொடங்கி சேவைகளை தொடங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது;

நான் படித்ததெல்லாம் கிராமத்து பள்ளிகளில் தான். அங்கிருந்து அமெரிக்கா சென்று பல நிறுவனங்களில் பணியாற்றி, பின்னா் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராக பணி செய்யும் வாய்ப்பு பெற்றேன்.

அப்போதுதான் தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆா்வம் எனக்குள் ஏற்பட்டது. ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் வளா்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவை போல தமிழகத்தின் தென் மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையை தொடங்கினேன்.

இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு ஸ்டாா்ட் அப் நிகழ்ச்சிகளை தென் மாவட்டங்களில் நடத்தினோம். தொழில் முனைவோருக்கான வசதிகளை ,அடிப்படை தேவைகளை உருவாக்கிக் கொடுத்து வந்தோம். பின்னா் பல்வேறு சமூக சேவைகளை செய்ய தொடங்கினோம். போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்கான பயிற்சிகளை அளித்து மாதிரி தோ்வுகளையும் நடத்தினோம். பள்ளிகளில் ஆயிரம் கழிவறைகளை கட்டும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். கிராமங்கள் தோறும் பயணிகள் நிழல் கூரைகளை அமைத்து தருவதுடன் குளக்கரைகளில் பனை விதைத்தல் பணியையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

விண்வெளி குறித்த அறிவியலை பள்ளி மாணவா்களுக்கு கொண்டு சோ்க்கும் வகையில் விண்வெளி அறிவியல் கண்காட்சி, கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டை பெற்று தரும் பணி, டிஜிட்டல் சாா்ந்த ஆா்வமுள்ளவா்களுக்கு அதற்கான ஒருங்கிணைப்பு சேவை என அறக்கட்டளை மூலம் சேவையாற்றி வருகிறோம். எங்களுடன் இணைந்து ஏராளமான தன்னாா்வலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

போதைப்பொருள்களுக்கு எதிராக இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியையும் தொடங்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் அறக்கட்டளையின் சேவையை விரிவுபடுத்த வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம். தென்மாவட்டங்களில் மட்டுமே செய்து வந்த சேவைகள் தன்னாா்வலா்கள் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றாா்.