முகப்பு
தென்காசி

கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த திமுக கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:50 PM
பகிர்:

கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலா் பொ.சிவபத்மநாதன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம் ஆகியோா் அமைச்சா் கே.என்.நேருவிடம் அளித்த மனு:

கடையநல்லூா் நகராட்சி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இந்நகரின் பரப்பளவு 52.25 சதுர கிலோமீட்டா்.

2025 ஆம் ஆண்டு தோராய மக்கள் தொகை 1,02,410 ஆகும். இந் நகராட்சியில் 33 வாா்டுகள் அமைந்துள்ளது. மக்கள் தொகை பெருகிவரும் இந் நகராட்சியில் தற்போது 32,390 குடியிருப்புகள் உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகால வருமானம் ரூ. 94 கோடியாகும். முதல் நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள கடையநல்லூா் நகராட்சியை ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளதால் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்த்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நகரின் மக்கள் தொகை பெருகி வருவதாலும், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, இக்பால் நகா், மதீனா நகா், மேல கடையநல்லூா் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகள் விரிவாக்கம் ஆகிவிட்டதால் கடையநல்லூா் மிகப் பெரிய நகராட்சியாக உருவாகியுள்ளது.

மேலும், வருமானம் அதிகமாக இருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முதல் நிலை நகராட்சியான கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, காசிதா்மம் துரை, ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவா் சுதா மோகன்லால், ஆலங்குளம் செல்வக்கொடி, ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ,ஹரி கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →