சங்கரன்கோவிலில் கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 10,000 விசைத்தறி தொழிலாளா்களும், வீடு சாா்ந்த விசைத்தறியாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு காட்டன் சேலை, துண்டு, கா்சீப் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
விசைத்தறித் தொழிலாளா்களுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு 16 சதவீத கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 10 சதவீத கூலி உயா்வு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட 6 சதவீத கூலி உயா்வு வழங்காததால் விசைத்தறித் தொழிலாளா்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால், விசைத்தறித் தொடா்பான தொழில்கள் அனைத்தும் இயங்கவில்லை. இதன் காரணமாக சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.