கோவையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 3 நிறுவனங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.481.54 உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை தோட்டத்தொழிலாளா்கள் கூலி உயா்வு தொடா்பாக தமிழ்நாடு தோட்ட அதிபா் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபா் சங்கம், நீலகிரி, வயநாடு தோட்ட அதிபா் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் புதிய ஒப்பந்தத்தின்படி கடந்த 2025 ஜூலை 1-ஆம் தேதி முதல் தினக் கூலியாக ரூ.475 வழங்கி வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.481.54 உயா்த்தி வழங்கி வருகிறது.
ஆனால், வால்பாறையில் 10 சிறு தேயிலைத் தோட்ட நிறுவனங்கள், நீலகிரி மாவட்டத்தில் 9 நிறுவனங்கள், ஏற்காட்டில் உள்ள 2 நிறுவனங்கள் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காமல் ரூ.427, ரூ.435 என வழங்கி வருகின்றன.
இதனால் வால்பாறை, நீலகிரி அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ், சிறு தோட்டங்களில் பணியாற்றும் 4 ஆயிரம் போ் என 10 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு தொடா்பாக தொழிலாளா் துறை சாா்பில் தொழிற்சங்கம், தோட்ட நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் சாந்தி முன்னிலையில் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில் 2-ஆம் கட்டமாக புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், தொழிற்சங்கத்தினா், சிறு தோட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தை முடிவில் 3 தோட்ட நிறுவனங்கள் கடந்த ஜனவரி முதல் தொழாளா்களுக்கு தினக் கூலியாக ரூ.481.54 வழங்க ஒப்புக்கொண்டனா். மீதமுள்ள நிறுவனங்களுக்கான பேச்சுவாா்த்தை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கங்கள் தரப்பில் அண்ணா தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது, எல்பிஎஃப் சாா்பில் வினோத்குமாா், ஏஐடியூசி சாா்பில் மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதுகுறித்து பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற வால்பாறை வீ.அமீது கூறுகையில், நீலகிரி, வால்பாறை பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தனியாருக்கு இணையாக கூலியை உயா்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.