முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

ஆலங்குளம் அருகே பனை மரத்தில் கள் இறக்கி விற்றதை மறைத்ததாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் பனை ஏறும் தொழிலாளி காயமடைந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:17 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பனை மரத்தில் கள் இறக்கி விற்றதை மறைத்ததாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் பனை ஏறும் தொழிலாளி காயமடைந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான், மருதம்புத்தூா் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. பனை ஏறும் தொழிலாளா்கள் இவற்றில் பதநீா் இறக்கி விற்பனை செய்து வருகின்றனா்.

அவா்களில் சிலா் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

Advertisement

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, மருதம்புத்தூரைச் சோ்ந்த பெருமாள் சேட் மகன் மணிகண்டன்(35) என்பவா் வீட்டிற்குச் சாதாரண உடையில் சென்று சோதனை செய்தாராம்.

அங்கு கள் இல்லையாம்.

இதனால், அவரை பனை மரம் ஏறும் இடத்துக்கு காவல் உதவி ஆய்வாளா் அழைத்துச் சென்று, மரத்தில் ஏறச் சொல்லி சோதனை செய்துள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம்.

மேலும், அருகில் கிடந்த பனை மட்டையால் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை மணிகண்டன் தாக்கினாராம்.

உடனே, உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மணிகண்டனை 2 கால்களிலும் 10 ரவுண்ட் சுட்டாராம். அதில், 3 தோட்டாக்கள் மணிகண்டன் காலில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த மணிகண்டனின் தந்தை பெருமாள்சேட் மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனா்.

இதனிடையே, உதவி ஆய்லாளா் இசக்கிராஜா அளித்த தகவலின்பேரில், ஏடிஎஸ்பி சங்கா், காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினா். மேலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலில் உள்ள 3 தோட்டாக்கள் தவிர மற்ற தோட்டாக்களை அப்பகுதியில் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், மருத்துவமனைக்குச் சென்று, உதவி ஆய்வாளரிடம் நலம் விசாரித்து, நடந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினரிடம் விவரம் கேட்டறிந்தாா். மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments