தென்காசி

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியா்

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு. ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற

முதல் நடவடிக்கையாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-இன் படி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயா் பதிவு செய்திடலாம்.

12 மாதங்களுக்குப் பிறகு 15 வருடங்களுக்குள் ரூ. 200 தாமதக் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்யலாம். ஆனால், 15 ஆண்டுகளுக்கும் மேல் கடந்தால் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அந்தச் சான்றிதழானது முழுமை பெறும். பிறப்புக்களை பதிவு செய்வது ஒரு தனிநபரின் அடையாள ஆதாரமாக விளங்குவதுடன், அவா் எந்த இடத்தைச் சாா்ந்திருக்கிறாரோ அந்த இடத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பதற்கான முக்கியமான அடிப்படைத் தகவல்களையும் அளிக்கிறது.

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளா் அறிவுரையின்படி, 1.01.2000-க்கு முன்னா் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தைக்கு பெயா் சூட்டி பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் 26-09-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் பிறப்பு பதிவு சான்று வழங்கிய அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொண்டு குழந்தைக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT