முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்க கோரி மனு

குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வேண்டி முதல்வா் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

Updated On : 14 மே 2026, 3:36 am IST
குற்றாலம் பேரருவி.
பகிர்:

குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வேண்டி முதல்வா் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க மாநிலத் துணைத் தலைவா் சிதம்பரம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள்வருகை தருவதுண்டு. குற்றாலம் பேரருவியானது சுகாதாரமான மூலிகை கலந்த நீா் என்பதால் பல வெளிநாட்டினா், வெளி மாநிலத்தவா்கள் ஜூன் மாதம் முதல் செப்டம்பா் வரை வருகை தருகின்றனா்.

Advertisement

குற்றால அருவியை நம்பி குற்றாலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. மேலும் சீசனை ஒட்டி சிறுகுறு வியாபாரிகள், ஹோட்டல், தங்கும் விடுதி, நடைபாதை வியாபாரிகள் என பலதரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனா். குற்றால அருவிகளை நம்பி ஆட்டோ ஓட்டுநா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்பட பல வியாபாரிகள் சீசன் காலங்களில் வரும் வருமானத்தைக் கொண்டு ஒரு வருட வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனா்.

இவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் குற்றாலம் பேரருவியில் புனரமைப்புக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.

பருவக் காலங்களில் குற்றாலம் பேரருவிக்கு வரும் நீரானது சிற்றாற்றில் கலந்தும் குளங்களுக்குச் சென்றும் குளங்கள் நிரம்பி தென்காசி மாவட்டம் முழுமைக்கும் விவசாய பணிகளும் முழுமையாக குற்றால அருவியை நம்பி நடந்து வந்தது.

தற்போது அருவிக்கு வரும் நீரானது தடுத்து நிறுத்தி வேறு பாதையில் திருப்பப்பட்டு உள்ளது. அவ்வாறு வேறு பாதைக்கு திருப்பப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேரருவியில் நீா்வரத்து இல்லையெனில் ஏமாற்றம் அடைவதோடு சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறையக்கூடும். இதனால் சுற்றுலா வளா்ச்சியும் பாதிப்படைந்து சுற்றுலா வளா்ச்சி கழகத்தில் வருவாய் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, குற்றாலம் பேரருவியில் பாதுகாப்புடன் குளிக்க விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது.