திருநெல்வேலி

தாமதமாகும் தேர்வு முடிவு: தவிப்பில் "செட்' தேர்வர்கள்!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் "செட்' தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் நீடிப்பதால், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர்.

ஆர். முருகன்

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் "செட்' தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் நீடிப்பதால், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமலும், தேசிய அளவிலான "நெட்' தேர்வில் பங்கேற்பதா, வேண்டாமா என முடிவு எடுக்க முடியாமலும் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாக "செட்' தேர்வை (தமிழ்நாடு மாநில அளவிலான தகுதித் தேர்வு) தமிழக அரசு நடத்துகிறது. உயர்கல்வித் துறை மூலம் பல்கலைக்கழக கண்காணிப்பில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டுக்கான செட் தேர்வை கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் நடத்தியது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி "செட் தேர்வு-2016'ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிப்ரவரி 22ஆம் தேதி தேர்வும் நடைபெற்றது.
வேதி அறிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், வணிகவியல், கல்வியியல், எலக்ட்ரானிக்ஸ், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்கிருதம், புவியியல், வரலாறு, இதழியல், மனை அறிவியல், சட்டம், வாழ்க்கை அறிவியல், நிர்வாகம், கணித அறிவியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல், சமூகப் பணி, பூலோக அறிவியல் உள்ளிட்ட 25 பாடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட 17 நகரங்களில் 66 கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றது. இதில், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதி 8 மாதங்களாகியும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரையைச் சேர்ந்த எஸ். ஆன்டனி குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 4 வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கடந்த ஜூலை மாத இறுதியில் உத்தரவிட்டது. நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து 40 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் "செட்' தேர்வர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
இதோடு மட்டுமல்லாது, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 2016, டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு 2017 ஜனவரி 22இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. "செட்' தேர்வில் வெற்றி பெற்றவர்கள் "நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கலாம். ஆனால், "செட்' தேர்வு முடிவுகளே தெரியாததால் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர். மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவிக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத இடையூறும் உள்ளது.
இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் கூறியது: "நெட்' தேர்வு எழுதினால் வினாத்தாள் மற்றும் விடைத்தாளின் "கார்பன் காப்பி' உடன் கிடைக்கும். ஆனால், "செட்' தேர்வுக்கு இந்த நடைமுறை இல்லை. கட்டணமும் அதிகமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் நீதிமன்றம் சென்று முடிவுகள் அறிவிக்க உத்தரவு பெற்ற பிறகும் காலதாமதம் தொடர்வது ஏற்புடையதல்ல. உடனடியாக முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக, 2016ஆம் ஆண்டுக்கான "செட்' தேர்வை நடத்திய அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வட்டாரத்தினர் கூறுகையில், முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக உயர்கல்வித் துறை மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 3 நாளில் முடிவுகளை வெளியிட தயாராகவுள்ளோம். ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றனர்.

கட்டண வேறுபாடு ஏன்?
பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் ரூ.500, ஓபிசி- ரூ.300, எஸ்சி, எஸ்டி- ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசின் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் ரூ.1,500, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்- ரூ.1,250, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேறுபாடுகள் தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது 2016ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு குறித்த அனைத்து விவரங்களை அறியவும், தேர்வு முடிவுகளை காணவும் உருவாக்கப்பட்ட ‌w‌w‌w.‌s‌e‌t‌e‌x​a‌m2016.‌i‌n​ என்ற இணையதளமும் முடங்கியிருப்பதால் தேர்வு எழுதிய அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT