திருநெல்வேலி

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: கூட்டுறவு அலுவலர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

DIN

கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மு.கருணாகரன் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துதல், பயிர்கடன் வழங்குதல் மற்றும் தேவையான ரசாயன உரங்களை இருப்பு வைத்தல் தொடர்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இப்போது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் வேளாண்மையில் நிலையான உற்பத்திக்கு துணை நிற்கும் வகையில் உள்ளது. பழைய திட்டத்தில் பிர்கா அளவில் வெள்ள வறட்சி கணக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இப்புதிய திட்டத்தில் கிராம அளவில் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் காப்பீடு செய்திடும் வகையில் அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர்க்கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கும், இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்கிட வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் நகைகள் வங்கியில் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கையிருப்பு வைக்க வேண்டும். உரங்களின் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளதால் குறைக்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். அதிக விலைக்கு விற்கும் கூட்டுறவுச் சங்கங்களின் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இதில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் பெருமாள், செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் மீராபாய், கூட்டுறவு துணைப்பதிவாளர்கள் தொண்டிராஜ், பாலகிருஷ்ணன், வளர்மதி, பெரியநாயகி, கனகசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT