முகப்பு
திருநெல்வேலி

மாரடைப்பால் இறந்த பி.எஸ்.எப். வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் திடீர் மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் திடீர் மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வெலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளத்தில் 24 குண்டுகள் முழங்க புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
குருவிகுளத்தைச் சேர்ந்த  தங்கச்சாமி மகன் அருள்பிரகாஷ்(39). எல்லைப் பாதுகாப்புப் படைவீரர். இவர், கடந்த 14 ஆண்டுகளாக எல்லையில் பணியாற்றி வந்தார்.
இறுதியாக மிசோரம் மாநிலம், லூங்லே என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் விடுமுறைக்காக  ஊருக்கு வந்துவிட்டு பின்னர் பணிக்குச் சென்றார். பிறகு, கடந்த 13ஆம் தேதி இரவு தனது மனைவி  ஜெயலட்சுமியுடன் (28) தொலைபேசியில் தொடர்புகொண்டு,  இம்மாதம் 17 ஆம் தேதி ஊருக்கு வருவதாக அவர் கூறியிருந்தாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அருள்பிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக  எல்லைப் பாதுகாப்பு படையிலிருந்து அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இதனிடையே, அருள்பிரகாஷின் உடல் குருவிகுளத்திற்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது உடலைப் பார்த்ததும் ஜெயலட்சுமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் இறுதிச் சடங்கு செய்வதில் ஒரு மணிநேரம் தாமதமானது. பின்னர், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பவன்ராஜ், அரசு ஆறுமுகம் ஆகியோரது தலைமையில்  12 கமாண்டோக்கள் அருள்பிரகாஷின் உடலில் தேசியக் கொடியைப் போர்த்தி மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அருள்பிரகாஷ்- ஜெயலட்சுமி தம்பதிக்கு சஞ்சய், நெஸ்தின்தினோ என்ற இருமகன்கள் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →