திராவிட இயக்கங்களை அழிக்க முடியாது
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற மதவாத சக்திகளின் முயற்சியை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற மதவாத சக்திகளின் முயற்சியை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
பாளையங்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. கர்நாடக மாநிலத்துக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமல்ல, காவிரி கரையில் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. வஞ்சக நோக்கத்தோடு பாஜக அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் என் மீது கல்வீசி தாக்கியது உண்மை. அக்கட்சியினர் என் மீது கல் வீசினர். பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் என் மீது சொல் வீசுகின்றனர்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதவாத சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிப்போம். திராவிட இயக்கங்களை அழிக்க முடியாது. 29 ஆண்டுகாலம் என்னை வார்த்தெடுத்த இயக்கம் திமுக. திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம், மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், மாநில இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.