முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்டித் தரக் கோரி முற்றுகை: 10 பெண்கள் உள்பட  77 பேர் கைது

திருக்குறுங்குடி நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு, ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்டித் தரக் கோரியும், தரமற்ற முறையில் பாலம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திருக்குறுங்குடி நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு, ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்டித் தரக் கோரியும், தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதைக் கண்டித்தும்,  திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற  மதிமுக உள்ளிட்ட சர்வக் கட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட  77 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருக்குறுங்குடி அருகேயுள்ள தளவாய்புரம் - ஆவரந்தலை இடையே நம்பியாற்றின் குறுக்கே பேரூராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.  
இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு  வந்த ஓராண்டுக்குள்ளாகவே கடந்த நவம்பர் 30ஆம் தேதி பெய்த மழையின்போது,  திடீரென இடிந்து விழுந்தது.  தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதே இதற்கு காரணம் என மதிமுக,  திமுக,  கம்யூனிஸ்ட்  உ ள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் புகார் தெரிவித்தனர்.   இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்டித் தரக் கோரியும்,  தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி,  அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  மதிமுக சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி,  மதிமுக புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம்  நடைபெற்றது. 
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒன்றியச் செயலர்கள் களக்காடு மு. மணிகண்டன், சேரன்மகாதேவி சிவானந்தம்,  மாவட்ட அவைத் தலைவர் ரைமண்ட், மாவட்ட மகளிரணித் தலைவி பிரமுஅம்மாள்,  நான்குனேரி நகரச் செயலர் பேச்சிமுத்து,  திமுக ஒன்றியச் செயலர் பி.சி. ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்குனேரி வட்டச் செயலர் முருகன்,  மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்டச் செயலர் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள்  ஒன்றியச் செயலர் ஜி. அன்பு,  சமக  நகரச் செயலர் செல்வகுமார் மற்றும்  10 பெண்கள் உள்ளிட்ட 77  பேரை போலீஸார் கைது செய்தனர். முற்றுகைப் போராட்டத்தையொட்டி, போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →