123 மையங்களில் இன்று பிளஸ் 2 தேர்வு: அச்சமின்றி எதிர்கொள்ள அறிவுரை
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 37,963 பேர் எழுதுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 37,963 பேர் எழுதுகிறார்கள்.
திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 123 தேர்வு மையங்களில் 16,366 மாணவர்கள், 21,597 மாணவிகள் என மொத்தம் 37, 963 பேர் எழுதுகின்றனர். இதில் 124 மாற்றுத் திறனாளிகள் அடங்குவர்.
தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை சரிபார்க்கவும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளின் முதல்பகுதியை சரிபார்க்கவும் வழங்கப்படும். பின்னர் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மொழிப்பாடமான தமிழ் முதல் தாள் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து பதிவெண்கள் பட்டியலிடும் பணி நடைபெற்றது. மாணவர்கள் தேர்வின்போது காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் நுழைவாயிலில் மாணவர்களின் பார்வையில் படும்படியாக வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவிக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் தலைமையில் பறக்கும் படை குழுவும், 10 தேர்வு அறைக்கு ஒருவர் வீதம் நிற்கும் படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை பாதுகாப்புடன் வைக்க 10 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காவல்துறை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்-மாணவிகள் மனஅழுத்தத்தைப் போக்கி அச்சமின்றி தேர்வெழுதும் வகையில் பிரார்த்தனைகள், ஆலோசனைகள் வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
அலுவலர்களுக்கு ஆலோசனை: இதனிடையே, வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பேசியது: தேர்வு மையங்களில் எந்தத் தவறுக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும். விடைத்தாள்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்குரிய மையங்களுக்கு கொண்டு சேர்க்கவும், அடிப்படை வசதிகளை முன்னேற்பாடோடு செய்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்து தேர்வுகளில் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் முருகானந்தம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜெயராஜ், ரமாதேவி, சின்னத்துரை, உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங், முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நாராயணன், ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.