முகப்பு
திருநெல்வேலி

குழந்தைகளை கட்டாயம்  படிக்க வைக்க வேண்டும்: நரிக்குறவ மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

நரிக்குறவ மக்கள் தங்களின் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

நரிக்குறவ மக்கள் தங்களின் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார். 
திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியம் வாகைக்குளம் நரிக்குறவர் காலனியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும்,  சார்பு நீதிபதியுமான வி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
 இக்கூட்டத்தில் நரிக்குறவ மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.  அதைத் தொடர்ந்து 6 நரிக்குறவ மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட நலத்திட்ட உதவிகளையும், 3 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு ரூ.26.08 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், ஒரு விவசாயிக்கு பால் பண்ணை வைப்பதற்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கடனுதவியையும், நரிக்குறவ மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 வீடுகளையும், மாலை நேர பயிற்சி முகாமிற்கு விளையாட்டு உபகரணங்களையும்  வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: 
 திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள நரிக்குறவ சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட "புராஜக்ட் ஸ்பார்க்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து நரிக்குறவ மக்கள்  அறிந்தும் கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  நீதிபதி உள்ளிட்ட அலுவலர்களுடன் நரிக்குறவ மாணவர்கள் ஒரு நாள் செலவிட்டு அவர்களின் பணிகளை பார்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர தயாராக இருக்கிறோம்.எனவே, குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும்.  நீங்கள் விழிப்புணர்வு பெற்று குழந்தை திருமணங்களை நிறுத்துவதுடன்,  உங்களது குழந்தைகளின் கல்வியறிவுக்கும்,  வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  
 இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி,  திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மயில்,  லெட்சுமி பிரியா, மானூர் வட்டாட்சியர் மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →