முகப்பு
திருநெல்வேலி

பாளை. சித்த மருத்துவமனை மருந்தகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து

பன்றிக் காய்ச்சலுக்கான சித்த மருந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து அரசு நிறுவன மருந்தகத்தில் கிடைக்கிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:


பன்றிக் காய்ச்சலுக்கான சித்த மருந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து அரசு நிறுவன மருந்தகத்தில் கிடைக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்மக்காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவி வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தாலும், பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் பன்றிக் காய்ச்சல், மர்மக் காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
பருவ மழைக் காலம் தொடங்கியது முதலே பல்வேறு காய்ச்சல்களை கட்டுப்படுத்தக்கூடிய நிலவேம்புக் குடிநீர் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்துக் கடையில் பல்வேறு சித்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் பொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை முதல் பன்றிக் காய்ச்சலுக்காக கபசுரக் குடிநீர் என்ற மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொரி வேர், அக்கராகாரம், முள்ளிவேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறு தேக்கு, நிலவேம்புச் சமூலம், வட்டத் திருப்பி வேர், கோரைக் கிழங்கு, கடுக்காய்த் தோல் ஆகியவை கபசுரக் குடிநீரில் உள்ளன. 100 கிராம் எடை அளவுள்ள கபசுரக் குடிநீர் பாக்கெட்டின் விலை ரூ.101 ஆகும்.
இதேபோல் ஆடாதோடை மணப்பாகு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சளி பாதிப்புள்ளவர்கள் ஆடாதோடை மணப்பாகுவை குடித்தால் சளி முற்றிலுமாக கட்டுக்குள் வந்துவிடும் என்பதால் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக மருந்தக ஊழியர்கள் கூறுகையில், கபசுரக் குடிநீர் இதற்கு முன்பே இருந்தாலும், இப்போதுதான் பன்றிக் காய்ச்சலை தடுக்கும் மருந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் 100 கிராம் எடை அளவுள்ள 97 பாக்கெட்டுகள் எங்களுக்கு வந்துள்ளன. 4 மணி நேரத்தில் மட்டும் 30 பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. கபசுரக் குடிநீர் மருந்தை 10 கிராம் அளவு எடுத்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அதை 50 மி.லி. அளவுக்கு வற்ற வைத்து குடிக்க வேண்டும். 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி. போதுமானது என்றனர்.
வருமுன் காக்கும் நடவடிக்கை: இது தொடர்பாக பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியின் நோய் அணுகா விதிகள் மற்றும் ஒழுக்கம் துறைத் தலைவர் மருத்துவர் கே.சலீம் கூறியது: பன்றிக் காய்ச்சல் நோய் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமாக பரவுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகளின் கூட்டு மூலமாகவே கபசுரக் குடிநீர் தாயரிக்கப்படுகிறது. அது பன்றிக் காய்ச்சலுக்கு நல்ல மருந்து.
பன்றிக் காய்ச்சல் போன்றவை ஆரம்பத்தில் வெளியே தெரிவதில்லை. 3 அல்லது 4 நாள்களுக்குப் பின்னரே பன்றிக் காய்ச்சலின் பாதிப்பை அறிய முடிகிறது. இருமல், தும்மல் மூலமாக மட்டுமின்றி, ரூபாய் தாள்களின் மூலம்கூட தொற்று நோய் பரவுகிறது என்பதை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
ரூபாய் தாளில் வைரஸ், பூஞ்சை போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, உடன் இருப்பவர்களும் வருமுன் காக்கும் நடவடிக்கையாக கபசுரக் குடிநீரை அருந்தலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது சிறந்தது என்றார்.

நிலவேம்புக் குடிநீருக்கு கடும் கிராக்கி மழைக்காலம் தொடங்கியது முதலே நிலவேம்புக் குடிநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து அரசு நிறுவன மருந்தகத்தில் நிலவேம்புக் குடிநீர் பாக்கெட்டை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
இது தொடர்பாக மருந்தக ஊழியர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள எங்கள் நிறுவனத்தில் நிலவேம்புக் குடிநீர் தயாரானதும் உடனடியாக மற்ற மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எவ்வளவு நிலவேம்புக் குடிநீர் பாக்கெட்டுகள் வந்தாலும், அவை உடனடியாக விற்று தீர்ந்துவிடுகின்றன. ஒருவருக்கு ஒரு கிலோவிற்கு மேல் நிலவேம்புக் குடிநீர் வழங்குவதில்லை. இலவச முகாம் நடத்துவதற்காக வாங்க வருபவர்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக 2.5 கிலோ வரை கொடுக்கிறோம். சனிக்கிழமை மதியம் 1 மணி அளவில் 100 கிராம் அளவுள்ள நிலவேம்புக் குடிநீர் பாக்கெட் 200, 500 கிராம் அளவுள்ள நிலவேம்புக் குடிநீர் பாக்கெட் 110 இங்கு வந்தன. அவையனைத்தும் 4 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.