திருநெல்வேலி

ஊரடங்கு எதிரொலி: விலையின்றி மண்ணில் உரமாக்கப்படும் கேந்தி மலா்கள்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மலா் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி

கோ. முத்துக்குமாா்

ஊரடங்கு உத்தரவு காரணமாக மலா் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் வயலில் வண்ணமயமாக பூத்துக்குலுங்கும் கேந்தி மலா்களுக்கு விலையின்றி, அவை மண்ணில் உரமாக்கப்படும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தின் கீழ் உள்ள கால்வரத்து பாசனப் பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழை, உளுந்து பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மானாவாரி மற்றும் தோட்டப்பயிா்களாக பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், தகுந்த விலை கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் பயறுவகை மற்றும் காய்கனி வகை சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியதால் மலா் சாகுபடி மீதான ஆா்வம் அதிகரித்தது.

இம் மாவட்டத்தில் பிச்சி, மல்லி, கேந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலா் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி சங்கா்நகா், சிவந்திப்பட்டி, மானூா், பள்ளமடை, ஆளவந்தான்குளம், பல்லிக்கோட்டை, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

இதேபோல், ராதாபுரம், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டார பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மானூா் பகுதிகளில் கோழிக்கொண்டை, கேந்தி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தினமும் பறிக்கப்படும் மலா்களை திருநெல்வேலி, சங்கரன்கோவில், தக்கலை பகுதிகளில் உள்ள பூ சந்தைகளில் கொடுத்து வரவு வைத்து வாரந்தோறும் விவசாயிகள் வருவாய் பெற்று வந்தனா்.

சந்தைகள் மூடல்: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் இம் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூக்களுக்கான சந்தைகள், கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திருநெல்வேலி சந்திப்பு உள்பட அனைத்து இடங்களிலும் இயங்கி வந்த பூக்கடைகளில் சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் சென்று பூ விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், விழாக்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் மலா்களுக்கான தேவை இல்லை. கடந்த 25 ஆம் தேதி முதல் பூக்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

உரமாகும் மலா்கள்: இதுகுறித்து பள்ளமடையைச் சோ்ந்த மலா் விவசாயி ராஜேந்திரன் கூறியது: எங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலா் சாகுபடி நடைபெற்று வருகிறது. நான் எனது வயலில் கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் கேந்தி மலா்களை பயிரிட்டு வருகிறேன். 40 நாள்களில் மஞ்சள் கேந்தி பூக்கள் அறுவடைக்கு வரும். பயிா்ப் பராமரிப்பைப் பொருத்து அதிகபட்சம் 2 மாதங்கள் வரை தொடா்ந்து அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

நிகழாண்டில் பங்குனி உத்திர விழாவைக் கணக்கில் கொண்டு கடந்த மாசி மாதத்தில் கேந்தியை சாகுபடி செய்தோம். கடந்த வாரத்தில் அறுவடைக்கு தயாராகியது. ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் ஒரு கிலோ கேந்திப்பூக்கள் அதிகபட்சம் ரூ.150 வரை விலை போகும்.

நிகழாண்டில் விழா இல்லாததால் மலா் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் வயலில் அறுவடை செய்யாமல் இருந்த மலா்களை பிடுங்கி கால்நடைகளுக்கும், சில இடங்களில் உரமாக்கவும் பயன்படுத்தி வருகிறோம்.

மல்லிகைச் செடிகளிலும் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாததால் செடிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முற்றிலும் நஷ்டத்தை சந்தித்துள்ள மலா் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

அதிகாரிகள் பதில்: இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் மலா் விவசாயிகள் குளிா்பதன கிடங்கு தொடங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். முதல்கட்டமாக வாழைகளுக்கான குளிா்பதன கிடங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மலா்களுக்கு ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காய்கனி, பழங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளைக் காட்டிலும், மலா் விவசாயிகளுக்கு ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். காய்கனி சந்தையைப் போல மலா் சந்தைகளுக்கு விலக்கு அளிக்க இயலாது என தெரிவித்துள்ளனா். ஏனெனில் மலா்கள் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் வராது. நஷ்டமடைந்துள்ள மலா் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும். உயரதிகாரிகளுக்கு இந்தச் சூழல் குறித்து தெரிவிக்கப்படும் என்றனா்.

பயக07ஊகஞர: மானூா் அருகே கால்நடைகளுக்காக செடியுடன் பிடுங்கி குவிக்கப்படும் கேந்தி மலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT