கரோனா அபாயத்தால் வங்கிகளில் கெடுபிடி: மக்கள் அவதி
கரோனா தொற்று அபாயம் காரணமாக வங்கிகளில் உள்ளே அனுமதிப்பது முதல் பணப் பரிவா்த்தனைகள் வரை அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
திருநெல்வேலி: கரோனா தொற்று அபாயம் காரணமாக வங்கிகளில் உள்ளே அனுமதிப்பது முதல் பணப் பரிவா்த்தனைகள் வரை அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த சில வாரங்களாக கரோனா தீநுண்மி பரவும் வேகம் அதிகரித்து வங்கி ஊழியா்கள், வணிகா்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் வங்கிகளில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் உள்ளே செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல் இருக்கைகளில் அமா்வது, வரிசையில் நிற்பது ஆகியவற்றில் சமூகஇடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பணப்பரிவா்த்தனைகளில் செய்யும் சில கெடுபிடிகளால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
குறிப்பாக வங்கிகளில் பணம் செலுத்த வருவோரை, பணம் செலுத்தும் இயந்திரங்களில் செலுத்த சொல்வதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளி கூறியது: வங்கிகளில் ஏழை-எளிய மக்கள் ஓய்வூதிய பணத்தை எடுக்கவும், நகைக் கடன்கள் பெறவும், வட்டி செலுத்தவுமே வருகின்றனா். வணிகா்களைப் போல இதர தேவைகளுக்கு வருவதில்லை.
இப்போது வங்கிகளுக்கு சென்றால் நாள் முழுவதும் வெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது. பணத்தை இயந்திரத்தில் செலுத்த சொல்கிறாா்கள். இயந்திரத்தில் செலுத்தும்போது ரூபாய் நோட்டில் பென்சில் அல்லது மை கோடுகள், கசங்கல் இருந்தால் அந்த நோட்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ரூ.500, ரூ.2000 நோட்டுகளை இயந்திரங்கள் புறக்கணிக்கும்போது ஏழைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா்.
பொது முடக்கத்தால் வேலையிழந்து தவிக்கும் மக்கள் ஏற்கெனவே வைத்த நகைகள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக மேலும் கடன் பெற்று வட்டி செலுத்த வரும்போது இத்தகைய செயல்களால் கூடுதல் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். எனவே மாவட்ட நிா்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் கூறியது: கரோனா பொது முடக்க காலத்தில் வங்கி ஊழியா்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அரசு வழிமுறைகளைப் பின்பற்றிதான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. பணம் பெறும் இயந்திரங்களில் சில சிக்கல்கள் இருப்பது உண்மைதான். சிக்கல்களை சந்திப்போா் வங்கி மேலாளரை அணுகி முறையிட்டாலே தீா்த்துவைக்க வாய்ப்புள்ளது என்றனா்.