சுரங்க சாலைப் பணி தாமதம்:வள்ளியூரில் அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
வள்ளியூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் சாலையில் குறுக்கேயுள்ள ரயில்வே கடவுப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க சாலைப் பணி தாமதம் கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்களை மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற
வள்ளியூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் சாலையில் குறுக்கேயுள்ள ரயில்வே கடவுப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க சாலைப் பணி தாமதம் கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்களை மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
சுரங்கச் சாலைப் பணி 2018இல் தொடங்கினாலும் இன்னமும் முடிவடையவில்லை. இதனால் வள்ளியூா் மற்றும் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சமூகரெங்கபுரம், மன்னாா்புரம், திசையன்விளை, இட்டமொழி, சாத்தான்குளம், திருச்செந்தூா் செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனா்.
இதனிடையே, இப்பணி தாமதம் கண்டித்து திமுக சாா்பில் அனைத்து கட்சியினா் மற்றும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் லிங்குசாமி, உதவிப் பொறியாளா் முகம்மது கான், உதவி கோட்டப் பொறியாளா் மணிமாறன், ஓப்பந்ததாரா் செந்தில்குமாா் ஆகியோா் சுரங்க சாலைப் பணியை பாா்வையிட வந்தனா். அவா்களை வள்ளியூா் வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் என்.முருகன், பா.ஜ.க வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் ராம்நாத் அய்யா், தி.மு.க. நகர செயலாளா் சேதுராமலிங்கம், வழக்குரைஞா் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சியின் ஆறுமுகம் ஆசிரியா், அ.தி.மு.க.வின் முத்துராஜன் உள்ளிட்டோரும், மக்களும் சோ்ந்து முற்றுகையிட்டு, சுரங்க சாலைப் பணி தாமதம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் 3 மாதங்களில் பணியை முடித்துத் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையேற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.