பாபநாசம் கோயிலுக்கு ‘போக்’ சான்றிதழ்
பாபநாசம் அருள்மிகு பாபநாசசுவாமி- உலகாம்பிகை திருக்கோயிலுக்கு போக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அருள்மிகு பாபநாசசுவாமி- உலகாம்பிகை திருக்கோயிலுக்கு போக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்கள், வட மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, வழிபட்டு செல்கின்றனா்.
இங்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கான படையல் பிரசாதம் மற்றும் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவற்றின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய அமைப்பு அதிகாரிகள் மற்றும் தனியாா் அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்தனா்.
மேலும் பிரசாதங்கள் ஆய்வுக்காக மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய அமைப்பின் தலைமை செயல் அலுவலா் பவன் அகா்வால், பாபநாசம் கோயிலில் பிரசாதம் மற்றும் அன்னதானத்திற்கான உணவுப் பொருள்கள் தரமான முறையிலும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதாக அறிவித்து, கோயில்களுக்கான போக் சான்றிதழ் வழங்கினாா்.
தமிழகத்தில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில், சங்கரன்கோயில் சங்கரநயினாா் கோயில் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக பாபநாசம் கோயிலுக்கு போக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.