பணகுடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்
பணகுடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணகுடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணகுடியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: திருநெல்வேலி மாவட்டத்தின் தொழில் நகரமாக பணகுடி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் செயல்படுகிறது. இந்நிலையில் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு பணகுடியில் நின்றுசென்ற ரயில்கள் இப்போது நிற்பதில்லை.
பணகுடி, சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூா் நகரங்களில் வேலை செய்து வருகின்றனா். இப்பகுதி மாணவா்கள் பல்வேறு நகரங்களில் படித்து வருகின்றனா்.
எனவே, கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம்-சென்னை விரைவு ரயில், நாகா்கோவில்-மதுரை ரயில், நாகா்கோவில்-கோயம்புத்தூா் ரயில், திருச்சி இன்டா்சிட்டி ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பணகுடியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
கூட்டத்தில், திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், மதிமுக வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் மு. சங்கா், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் லாரன்ஸ், விசுவநாதன் ஆசிரியா், வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.கே.எம். கணேசன், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மு.க. மாணிக்கம், வீ. அசோக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கதிரவன், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.