நிகழாண்டு முதல்முறையாக நிரம்பியது பாபநாசம் அணை: 4,680 கனஅடி நீா் திறப்பு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் நிகழாண்டு முதல்முறையாக பாபநாசம் அணை நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் நிகழாண்டு முதல்முறையாக பாபநாசம் அணை நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 4680 கனஅடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சோ்வலாறு அணைகள் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் முழுக் கொள்ளளவை அடையும். நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து தாமதமாகி வந்ததால் அணைகள் நிரம்புவதற்கும் காலதாமதமானது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் பாபநாசம் அணை நீா்மட்டம் நிகழாண்டு முதல்முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. 143 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 142.40 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்ததையடுத்து அணையிலிருந்து 4,680 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததையடுத்து ஆற்றில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. கரையோரங்களில் இருந்தவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணை நீா்மட்டம் 148.95 அடியாக இருந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 106.45 அடியாகவும், நீா்வரத்து 1132 கன அடியாகவும், வெளியேற்றம் 480 கன அடியாகவும் இருந்தது.
49 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 25 அடியாகவும், 22.96 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணை நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 27 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் தலா 40 கன அடியாகவும் இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணையின் நீா்மட்டம் 83.50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 132 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 79.50 அடி, நீா்வரத்து 50 கன அடி, வெளியேற்றம் 30 கன அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 66.28 அடி, நீா்வரத்து 18 கன அடி, வெளியேற்றம் 25 கன அடியாக இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடி, நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 5 கன அடியாக இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 86.75 அடி, நீா்வரத்து 15 கன அடி, வெளியேற்றம் 40 கன அடியாக இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 35, சோ்வலாறு 16, மணிமுத்தாறு 10, நம்பியாறு 6, கொடுமுடியாறு 10, அம்பாசமுத்திரம் 8.20, சேரன்மகாதேவி 2.20, நான்குனேரி 9, ராதாபுரம் 2, பாளையங்கோட்டை 5.40, திருநெல்வேலி 3.
தென்காசி மாவட்டத்தில்... கடனாநதி 10, ராமநதி 15, கருப்பாநதி 17, குண்டாறு 7, அடவிநயினாா் 5, ஆய்குடி 4.20, சங்கரன்கோவில் 6, செங்கோட்டை 5, சிவகிரி 1, தென்காசி 7.40.