திருநெல்வேலி

நெல்லையில் புதிய முயற்சி: அரசுப் பள்ளியை வண்ணமயமாக்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அரசுப் பள்ளியை ரயிலின் தோற்றம் போல வண்ணத்தால் மாற்றியது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரளத்தில் அரசு பள்ளிகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளியின் சுவரில் ரயிலின் தோற்றத்தில் வண்ணம் தீட்டும் முயற்சி முதன்முதலில் எடுக்கப்பட்டது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் அதுபோன்ற ஓவியங்கள் வரையப்பட்டன. திருநெல்வேலியில் ஏற்கெனவே ரெட்டியார்பட்டி அங்கன்வாடி மையத்தில் ரயில் போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேலப்பாளையம் அருகே குறிச்சியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரயில் ஓவியம் தீட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் கூறியது: 

"எங்களது மன்றத்தின் மூலம் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கிராமங்களில் பணிகளைச் செய்ய நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ஏழை-எளிய மக்கள், மாணவர்களுக்கு தேவையான உதவியைச் செய்வதில் முன்னுரிமை அளிக்க கூறியுள்ளார். அதன்படி குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ரயில் போன்ற ஓவியத்தை சுவரில் வரைய முடிவு செய்து அனுமதி பெற்றோம்.

அந்த ஓவியம் மட்டுமன்றி ஊனமுற்ற குழந்தைகளுக்கு நலஉதவிகள் என மொத்தம் ரூ. 73 ஆயிரம் மதிப்பில் பணிகளை செய்துள்ளோம்" என்றார்.

ஓவியத்தை வரைந்த வீரவநல்லூரைச் சேர்ந்த ஓவியர் ஏ.லாரன்ஸ் கூறியது: 

"கடந்த 32 ஆண்டுகளாக ஓவியப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். அரசுப் பள்ளிகளில் அறிவியல் (மனித உடல் உறுப்புகள், தாவரங்களின் பெயர்கள்), சமூக அறிவியல் (இந்திய, தமிழக வரைப்படங்கள்) ஆகியவற்றை மிகவும் குறைந்த கட்டணத்தில் வரைந்து கொடுத்து வருகிறேன்.

குறிச்சி பள்ளியில் ரயில் ஓவியத்தை 30 நாள்களில் வரைந்து முடித்துள்ளேன். இதுதவிர அங்கு போக்குவரத்து சிக்னல், மரம் வளர்ப்பின் அவசியம், பெண் குழந்தைகளைப் பாதுகாத்தலுக்கான விழிப்புணர்வு ஓவியங்களையும் சுற்றுச்சுவரில் வரைந்துள்ளேன். மகாத்மா காந்தி, ஏபிஜெ. அப்துல் கலாம், காமராஜர், நேரு ஆகியோரின் உருவப்படங்களை வரைந்து அவர்களின் பிறந்த நாள், அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் தினங்களையும் குறிப்பிட்டுள்ளோம். 

ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பேனர்கள் வரத்து காரணமாக என்னைப் போன்ற ஏராளமான ஓவியர்களுக்கு வேலை மிகவும் குறைந்துள்ளது. ஆகவே, பள்ளிகள்தோறும் அறிவியல் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைய அரசும், சமூக ஆர்வலர்களும் வாய்ப்பளித்தால் இளம்ஓவியர்கள் பலர் உருவாகுவதோடு, அவர்களின் திறமையால் பலருக்கு நன்மைகள் கிடைக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT