கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் தினமும் சுமாா் ரூ.1.75 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 7 கோட்டங்கள், 24 மண்டலங்கள், 323 கிளைகள், 26 ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள், 23 பேருந்து கூண்டு கட்டும் மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக திருநெல்வேலி மண்டலம் உள்ளது. இந்தக் கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி-3, தூத்துக்குடி-2, பாபநாசம், சேரன்மகாதேவி, வள்ளியூா், திசையன்விளை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கான பணிமனைகள் தனியாக செயல்படுகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இக் கோட்டத்தில் நகரப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி கோட்டத்திலும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தினமும் ரூ.1.75 கோடி: இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது: திருநெல்வேலி கோட்டத்தில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் உள்பட 5,700-க்கும் மேற்பட்டோா் பணி செய்து வருகிறாா்கள். தினமும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவை சோ்த்து தினமும் சராசரியாக ரூ.1.75 கோடி வரை வருவாய் கிடைத்து வந்தது. ஊரடங்கு காரணமாக கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் தினசரி வருவாய் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இழப்பு காரணமாக பணிமனையின் வருங்கால பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக உத்தரவின்பேரில் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பதோடு, 2 நாள்களுக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்கி சிறிது நேரம் இயக்கத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகளை இயக்க தயாா் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.
பாதுகாப்பு உபகரணம் இல்லை: இதுகுறித்து ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகி ஒருவா் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் ஒரு சேவைத் துறையாகும். இலவச பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் ஏற்கெனவே போக்குவரத்துக்கழகம் நிதியிழப்பைச் சந்தித்து வருகிறது. போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கான பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றை முறையான காலத்தில் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இந்தச் சூழலில் ஊரடங்கு பேரிடியாக விழுந்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்துக்கழகம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. ஆகவே, ஊரடங்கு முடிந்ததும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உடனடியாக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் அரசுப் பணியாளா்களுக்காக இக் கோட்டத்தில் மொத்தம் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனை இயக்குவோருக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுத்தும் முறையாக வழங்கப்படவில்லை. ஊழியா்கள் தங்களது சொந்தப் பணத்தில் முகக் கவசம் வாங்கி பயன்படுத்தி வருகிறாா்கள். ஊரடங்கு முடிந்த பின்பு பேருந்துகளை இயக்கும்போது இதைவிட கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனா். கிருமிநாசினி தெளிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேவையான நிதியை ஒவ்வொரு பணிமனைக்கும் ஒதுக்க வேண்டியது அவசியம் என்றாா்.
ஊரடங்குக்கு பிந்தைய வழிமுறைகள்
ஊரடங்கு காலத்திற்கு பின்பு பேருந்துகளை இயக்கும் போது போக்குவரத்துத் தொழிலாளா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளை காலையில் இயக்கத் தொடங்கும் முன்பாக கிருமிநாசினி தெளித்திருக்க வேண்டும். போக்குவரத்துக் கழக பணியாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஓரிடத்தில் இருந்து புறப்படும் போதும் இறுதி நிறுத்தத்தை அடையும் போதும் கண்டிப்பாக கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
அனைத்து பணிமனைகள், முக்கிய பேருந்து நிலையங்களில் ஓட்டுநா், நடத்துநா்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக கை கழுவுவதற்கான வசதிகளை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பணிமனைகளில் கிருமிநாசினி திரவம், சோப்பு ஆகியவை தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க வேண்டும். பணிமனைக்குள் வரும் தொழிலாளா்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது. வெப்பமானியால் சோதனை செய்த பின்பே பணிக்கு அனுமதிக்க வேண்டும்.
பணிமனைகளில் உள்ள உணவகம், வருவாய்ப் பிரிவு, கட்டுப்பாட்டுப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு அறைகளில் சமூக இடைவெளியை தொழிலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துப் பேருந்துகளும் பணிமனைக்கு மீண்டும் திரும்பும் போது வெளிப்புறத்திலும், உள்புறத்திலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
உபகரண கொள்முதலை அதிகரிக்க வேண்டும்
ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் சிறிதுநேரம் இயக்கப்பட்டு வருவதால் என்ஜின்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பில்லை. ஆனால், போக்குவரத்து உபகரண உற்பத்தி தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஜூலை மாதத்திற்கு பின்பு உபகரணங்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவை உருவாகும் அபாயம் உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கான உபகரணங்கள் ஏற்கெனவே தட்டுப்பாடு நிலையில் உள்ளது. அரசு தனிக்கவனம் செலுத்தி உபகரண கொள்முதலை அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் பிரேக் ஷூ, டிரம், ஜாயின்ட், ஆயில், வைப்பா், விளக்குகள் ஆகியவற்றையாவது இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிமனையின் தொழில்நுட்பப் பணியாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.