நெல்லையில் புகையிலைப் பொருள்களின் நடமாட்டம் குறையவில்லை: கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், கடைகளில் புகையிலைப் பொருள்களின் விற்பனை
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், கடைகளில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடையின்றி நடைபெறுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளை கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், புகையிலைப் பொருள்கள் தொடா்ந்து மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், புகையிலைப் பொருள்களின் விற்பனையை ஒழிக்க முடியவில்லை.
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், புகையிலைப் பொருள்களின் விற்பனையை தடுக்க முடியவில்லை. உணவு பாதுகாப்புத் துறையினரும் அவ்வப்போது கடைகளில் சோதனைகளை நடத்தி புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்வதோடு, சிறிய கடைகளுக்கு அபராதமும், பெரிய கடைகள் மீது வழக்கும் தொடா்ந்து வருகிறாா்கள்.
எனினும் புகையிலைப் பொருள்களின் நடமாட்டம் குறையவில்லை.
இதனிடையே, கரோனா தடுப்பு ஊரடங்கை காரணம் காட்டி, தற்போது புகையிலைப் பொருள்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் ரூ.100 கொடுத்து பலா் அதை வாங்கி வருகிறாா்கள்.
இது தொடா்பாக ஒருவா் கூறுகையில், ‘ஊரடங்கிற்கு முன்னதாக ரூ.15 விற்பனை செய்யப்பட்ட புகையிலை, பின்னா் படிப்படியாக விலை உயா்ந்து தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் விலை மேலும் அதிகரிக்கலாம்’ என்றாா்.
6 மாதம் சிறை; ரூ.50 ஆயிரம் அபராதம்: இது தொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறியதாவது: புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடா்ச்சியாக பல்வேறு கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சிறிய கடைகளில் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அது பறிமுதல் செய்யப்படுவதோடு, அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த கடையின் உரிமையாளா் இரண்டாவது முறையாக அதே தவறை செய்யும்பட்சத்தில் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மூன்றாவது முறை தவறிழைக்கும்பட்சத்தில் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், பெரிய கடையாக இருக்கும்பட்சத்தில் அங்கு பறிமுதல் செய்யப்படும் புகையிலைப் பொருள்களிலிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் அபராதமும், சிைண்டனையும் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
இந்நிலையில், திருநெல்வேலி மாநகா் முழுவதும் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி, ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளா்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.