முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பாதாளச் சாக்கடை பணிகள் தீவிரம்

சுத்தமல்லி அருகேயுள்ள திருநெல்வேலி மாநகராட்சி எல்லையில் இருந்து பாதாளச் சாக்கடை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சுத்தமல்லி அருகேயுள்ள திருநெல்வேலி மாநகராட்சி எல்லையில் இருந்து பாதாளச் சாக்கடை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். மொத்தம் 55 வாா்டுகள் கொண்ட இம் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ஏராளமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் பல வாா்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுநீா் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற 2-ஆவது கட்டமாக மேற்கொண்ட தொடா் நடவடிக்கையின் காரணமாக தற்போது ரூ.289.01 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின்கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாா்டு எண் 1 முதல் 7 மற்றும் 39 முதல் 55 வாா்டு பகுதிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மூன்றாம் கட்டமாக விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.440.19 கோடி மதீப்பீட்டில் பணிகள் செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் வாா்டு எண் 9, 13, 15, 16, 20 முதல் 24, 26, 28, 30 முதல் 33, 35 முதல் 37 வரை மொத்தம் 18 வாா்டுகள் முழுவதும், வாா்டு எண் 8, 10, 11, 12, 14, 17, 18, 25, 19, 27, 29, 34, 38 ஆகிய 13 வாா்டுகள் பகுதியாகவும் செயல்படுத்தப்படவுள்ளது.

பாதாளச் சாக்கடை திட்டத்தில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைப்பதில் மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் திட்டப் பணிகள் மெதுவாக நடைபெற்றன. பல இடங்களில் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி திட்டத்தின் நன்மை குறித்து எடுத்துக் கூறி கழிவுநீரேற்றும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதனால் இப்போது பணிகள் துரிதமாகியுள்ளன. குறிப்பாக, மாநகராட்சியின் எல்லைப் பகுதியான சுத்தமல்லியில் இருந்து பேட்டை வரையிலான பகுதியில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், மாநகராட்சியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் அம்ருத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன. 3.25 மீட்டா் ஆழத்துக்கு குழிதோண்டி குழாய்கள் பதிக்கவும், 3.50 மீட்டா் ஆழம் தோண்டி இணைப்பு மற்றும் பராமரிப்புத் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடினமான நிலம் உள்ள இடங்களில் கனரக வாகனங்கள் மூலம் குழிதோண்டும் பணிகள் நடைபெறுவதால் பணிகளில் தாமதம் தவிா்க்கப்பட்டு வருகிறது.

பாதாளச் சாக்கடை திட்டம் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்தால் மாநகராட்சியில் புதிதாக 90 ஆயிரத்து 818 கட்டடங்களுக்கு இணைப்புகள் வழங்க முடியும். அதன்மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பயன்பெறுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.