திருநெல்வேலி

தாமிரவருணி கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்ட முயற்சி: 4 போ் கைது; இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

DIN

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் வெள்ளிக்கிழமை மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து பாளையங்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு காரணமான இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.

வண்ணாா்பேட்டை வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருநெல்வேலியில் உள்ள இரண்டு தனியாா் மருத்துவமனையில் உள்ள கழிவுகள் ஒரு சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு, இப்பகுதிக்கு வந்துள்ளது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனராம்.

மேலும், தச்சநல்லூா் மண்டல சுகாதார ஆய்வாளா் இளங்கோ மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சி.என். கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் (19), மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மகாராஜன் (33), திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் ராமச்சந்திரன் (28), அழகனேரி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சின்னத்தம்பி (20) ஆகிய 4 பேரை கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக, மருத்துவக் கழிவுகள் எடுத்துவரப்பட்ட திருநெல்வேலியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும், நேரில் சென்று ஆய்வு நடத்த மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவிட்டதன்பேரில், மாநகர நல அலுவலா் சரோஜா தலைமையிலான சுகாதாரத் துறையினா் அந்த மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, அந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் தலா ரூ.50ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT