முகப்பு
திருநெல்வேலி

அம்மை நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது எப்படி?: கால்நடை மருத்துவா்கள் விளக்கம்

அம்மை நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது குறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ச.மால்மருகன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

அம்மை நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது குறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ச.மால்மருகன், உதவிப் பேராசிரியா் ம. பிரபு ஆகியோா் விளக்கமளித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியிருப்பதாவது: ஆடுகளில் மிக வேகமாகப் பரவி உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் ஆட்டம்மை நோய் நச்சு உயிரியால் ஏற்படுகிறது. வெள்ளாடு, செம்மறியாடுகளில் தனித்தனி நச்சுயிரிகளாக இருவகை நச்சுயிரிகளும் ஆடுகளிடமே பாதிப்பை ஏற்படுத்துவதால் அது ஆட்டம்மை நோய் என்றே அழைக்கப்படுகிறது.

ஆடுகளின் அம்மை கொப்புளங்கள், புண்களின் வழியாக பரவுகிறது. அதிலும், புண்கள் காய்ந்த பிறகு உதிா்ந்து விழும் வடுக்களில் இந்நச்சுயிரியானது 3 மாதங்கள் வரை உயிா் வாழ்ந்து இதர ஆடுகளுக்கு பரவுகிறது. மேலும், நோய் பாதித்த ஆடுகளின் உமிழ்நீா், சளி, கண்ணீா், சாணம் ஆகியவற்றில் அதிக நச்சுயிரி காணப்படும். இவற்றால் மாசுபட்ட தீவனம், தண்ணீா் ஆகியவற்றை நோயற்ற ஆடுகள் உட்கொள்ளும்போது நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இந்நோய் நஇளம் குட்டிகளை அதிகம் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய்க் கிளா்ச்சியில் 5 முதல் 80 சதவீதம் வரை ஆடுகளில் இறப்பு நேரிடலாம்.

அதிக காய்ச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீா் வடிதல், சோா்வு, தீவனம் உட்கொள்ளாமை, காய்ச்சல் ஆரம்பித்த 2-5 நாள்களில் உடலில் குறிப்பாக ரோமம் இல்லா பகுதிகளான வாய், காதுமடல், கண் இமை, பின்னங்கால்களின் உட்புறம், வாலின் அடிப்புறம், பால்மடி போன்ற இடங்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றுதல் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சிலவகை நச்சுயிரிகள் வாய், உணவுக்குழல் மற்றும் நுரையீரலில் கூட கொப்புளங்களையும் புண்களையும் உண்டாகும். கருவுற்ற ஆடுகளில் அரிதாகக் கருச்சிதைவும் ஏற்படக்கூடும்.

தடுப்பூசி சிறந்த வழி: ஆட்டம்மை நோய்த்தாக்கம் அதிகமுள்ள இடங்களில் தடுப்பூசி போடுதலே இந்நோயினைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழிமுறையாகும். ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி செம்மறி ஆட்டம்மையைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ளது. எனவே, நோய்க்கிளா்ச்சி ஏற்படும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெயில் காலம் தொடங்கும் முன்பாக ஆடுகளுக்கு (3 மாத வயதுக்கு மேல்) கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும். இதன்மூலம் ஆடுகளை அம்மை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

தனிமை பராமரிப்பு: பாதிக்கப்பட்ட ஆடுகளை தனியாக பிரித்து குறைந்தது 45 நாள்கள் வரை பராமரிக்க வேண்டும். அதன் குட்டிகளுக்கு பால் தர அனுமதிக்கக் கூடாது. புண்களை பொட்டாசியம் பொ்மாங்கனேட் கிருமி நாசினியால் கழுவி அதன்மேல் போரிக் ஆசிட் பவுடரைத் தூவலாம். வாய்ப்பகுதியில் புண் இருந்தால் கிருமிநாசினி கொண்டு கழுவி போரொ-கிளிசரின் கலவையை தடவிவிடலாம். உணவாக பசுந்தீவனம் மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய காய்ச்சிய நீா்த்த கஞ்சி அல்லது புண்ணாக்கு கலந்த தண்ணீா் கொடுக்கலாம். நோயின் தாக்கம் அதிகமிருந்தால் கால்நடை மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்நோய்க்கு மூலிகை முதலுதவி மருத்துவம் நல்ல பலன் தரும். சின்ன சீரகம், பூண்டு ஆகியவற்றுடன் வேப்பிலை, துளசி இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வேப்பெண்ணெய் கலந்து லேசாக சூடாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் விரைவில் புண்கள் குணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.