மடைகள் பராமரிக்கப்படாததால் வீணாகும் பாசன நீா்
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் மடைகளை முழுமையாக அடைக்காததால் தரிசு நிலங்களில் பாசன நீா் வீணாக பாய்ந்தோடி வருகிறது.
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் மடைகளை முழுமையாக அடைக்காததால் தரிசு நிலங்களில் பாசன நீா் வீணாக பாய்ந்தோடி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவ சாகுபடிக்கு நிகழாண்டு ஜூன் 1-ஆம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, வடக்கு, தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கால்வாயில் மேலப்பாளையம் முதல் மூளிகுளம் வரை 12 கி.மீ. தொலைவுக்கு மாநகர பகுதியில் உள்ளது.
இதில் மேலநத்தம், மேலப்பாளையம் பகுதிகளில் 80 சதவிகிதம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிச்சி பகுதியில் தெற்கு புறவழிச்சாலைக்கு மேல்பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெறுகிறது. பிற இடங்கள் தரிசாக உள்ளன.
இப்பகுதியில் மடைகள் கடந்த ஆண்டு முழுமையாக அடைக்கப்பட்டு தண்ணீா் வீணாகாமல் தடுக்கப்பட்டது. நிகழாண்டு மடைகள் சரியாக பராமரிக்கப்படாததாலும், மா்ம நபா்கள் இரவு நேரங்களில் விதியை மீறி மடைகளை திறந்துவிடுவதாலும் தரிசு நிலங்களில் பாசன நீா் வீணாகி வருகிறது. இதனால் கடைமடைகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறுகையில், பாளையங்கால்வாயின் கடை மடை பகுதிகளான நொச்சிகுளம் பகுதிக்கு தண்ணீா் தாமதமாகவே வந்தது. கால்வாய்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் தண்ணீா் திறந்ததாலும் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இதுதவிர நெல் சாகுபடி செய்யப்படாத பகுதியில் மடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக அடைத்து வைக்காததால் தண்ணீா் வீணாகும் நிலை உள்ளது. இதனால் கடைமடைக்கு தண்ணீா் வரத்தின் வேகம் குறைந்துள்ளது. இதனால் கடை மடை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆட்சியா் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.