முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... இலவு காக்கும் கிளிகள்?

திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட்டுப் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கட்சிகளின் நிலை பற்றி...

Updated On : 29 மார்ச், 2026 at 3:12 AM
காத்திருந்து காத்திருந்து... - செய்யறிவு சித்திரிப்பு / விஜய்
பகிர்:

அரசியலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருவிழா, சட்டப்பேரவைத் தேர்தல். அரசியல் கட்சியில் சாதாரணமாக நுழையும் ஒரு தொண்டனால் அதிகபட்சமாக எம்.எல்.ஏ.வாக மட்டும்தான் ஆக முடியும் (எம்.பி.யெல்லாம்  நெக்ஸ்ட் லெவல்!); அதிர்ஷ்டம் இருந்தால், அதற்கேற்ற தொடர்புகளும் இருந்தால் அமைச்சரும்கூட ஆகலாம் (அதுவும் எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில்தான்). மற்றபடி தங்களால் இயன்றளவில் எல்லாரும் எப்போதும் கட்சித் தொண்டாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

தொண்டர்கள் தொண்டாற்றிக் கொண்டிருந்தால் பரவாயில்லை; தலைவர்களும் சேர்ந்து தொண்டாற்றுவதென்று முடிவு செய்துவிட்டால்?

2018-ல் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கி, 2019 மக்களவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டார் கமல்ஹாசன் (3.63 சதவிகித வாக்குகளைப் பெற்றார்). 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்குமார், பாரிவேந்தரின் சிறு கட்சிகளுடன் இணைந்து ம.நீ.ம. போட்டியிட்டது. கோவை தெற்கில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோற்றார்.

என்ன நினைத்தாரோ, 2024 மக்களவைத் தேர்தலில், தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையிலும் திமுக கூட்டணியை ஆதரித்தார். மாநிலங்களவை எம்.பி. பதவியுடன் பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தொகுதிகளும் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன்.

ஆனால், இப்போது பேரவைத் தேர்தலில் கேட்ட அளவு தொகுதிகளும் கிடைக்கவில்லை;  தங்கள் டார்ச் சின்னத்திலும் போட்டியிட முடியாது என்றதும், ஆனாலும் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்; இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ‘பெரிய மனசு வைத்து’ ஒதுங்கிக்கொண்டுவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

இப்படி வெற்றிகரமாகப் போட்டியிலிருந்து விலகிக் கொள்வது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல; 2006-ல் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 6 சதவிகித வாக்குகளுடன் 6 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது (ஆனால், திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது). எனினும், 2011 பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்றதும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, அந்தத் தேர்தலையே புறக்கணிக்கப் போவதாக அறிவித்து வெளியேறினார்.

இப்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு, மூன்றில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது (சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ்!).

அழுவதற்கு ஒருவேளை இன்னொரு காரணமும் இருக்கலாம். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணியில் போட்டியிட மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; 4 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. ஆனால், அத்தனையும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்! எனவே, மதிமுகவின் குத்துமதிப்பான வாக்கு சதவிகிதத்தைக்கூட கணக்கிட முடியாது. ஏனெனில், அவர்கள் பெற்ற வாக்குகள் எல்லாமும் திமுகவின் வாக்குகளாகத்தான் கணக்கிடப்படும். மதிமுக தனித்திருக்காது (அதனால்தான் 6-க்குப் பதிலாக இந்த முறை போட்டியிட 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்கள்போல).

கூட்டணிகளுக்குத் தலைமை வகித்து முன்னெடுத்துச் செல்லும் கட்சிகளின் தலைவர்கள் ‘செல்லமாக’க் கேட்டுக்கொள்ளும்போது, பாவம், இந்தக் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் என்னதான் செய்வார்கள்?

2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாகப் போட்டியிட்டுத் தோற்றதைத் தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலிலிருந்து இப்போது வரையிலும் திமுகவுடன்தான் கூட்டணி – காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூ., மார்க்சிய கம்யூ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லாமும்.

2021 பேரவைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. விசிக 4 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரு தொகுதிகளிலும் வென்றன. 25-ல் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த முறை எப்படியும் போட்டியிடக் கூடுதலான தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று திமுகவுடன் பல சுற்றுப் பேச்சுகளை இந்தக் கட்சித் தலைவர்கள் நடத்தினார்கள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரப் போவதாகக் கூறியும் (மிரட்டியும்?) ராகுல் காந்தியின் மௌனத்தையும் காட்டியே கூடுதலாக மூன்றை, 28 தொகுதிகளை காங்கிரஸார் பெற்றுவிட்டனர்.

[கூட்டணி உறுதி செய்யப்படும் வரை ஒரு பிரச்சினை, உறுதி செய்யப்பட்ட பிறகு வேறொரு பிரச்சினை, கூட்டணிக்குள், கட்சிக்குள் எனப் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் காங்கிரஸுக்குள் இருக்கும் இன்னொரு வகையான காங்கிரஸார் (தேர்தல் நேரத்தில் இவ்வாறு கருத்துக் கூறிக் கொண்டிருந்தால் - இந்தப் பூசல்களுக்கு இடையே - இவர்களுடன் கூட்டணிக் கட்சியினர் எப்படி இணக்கமாக வேலை பார்க்கப் போகிறார்கள்? வாங்கிய 28-ல் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்? உள்ளபடியே இதனால் பயனடையப் போவது யார்?  மே 4-ல்தான் தெரியும்!)].

ரொம்பவும் தாமதிக்காமல் ஏதோவொரு வகையில் ஒப்புக்கொண்டு, ஆறில் ஒரு தொகுதியைக் குறைத்து 5 தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது. நீண்ட பேச்சுகளுக்குப் பிறகு அதே 5 தொகுதிகளுக்கே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

எவ்வளவோ பேசிக்கொண்டிருந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தொகுதிகள் அதிகமாக்கி, 8 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது திமுக. எத்தனை தொகுதிகள் என்பதற்காகவும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதற்காகவும் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றிருக்கின்றன. பெரியண்ணன் பாணியில் நடந்துகொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டிவிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் வெளியேறிப் போய்விட்டார்.

எந்தக் கூட்டணியுடன் வேண்டுமானாலும் இடம் பெறலாம் என்ற தாராளத் தன்மையுடன், எங்கே இடம் பெறப் போகிறது என்று உறுதியாக எதுவும்  தெரியாமல் கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டிருந்த தேமுதிக, திடீரென ஒருநாள் அறிவாலயம் சென்று திமுகவுடன் சேர்ந்துவிட்டது – 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி (தன் வாழ்நாள் இலக்கை அடைந்துவிட்டார் சுதீஷ்!).

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இதேபோல பிரச்சினைகள். தொகுதி எண்ணிக்கையில் பெரிய சிக்கல்கள் இல்லாவிட்டாலும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விதத்தில் அதிருப்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதிமுக சார்பில் பல முறை வெற்றி பெற்றுவந்த முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் போட்டியிடும் அவிநாசி தொகுதியையே பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கிவிட்டார்கள். அதிமுகவினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தொகுதிகள் பல கூட்டணிக் கட்சிகளுக்கும் கூட்டணிக் கட்சிகள் கேட்டவை அதிமுகவுக்கும் என. ஆதரவாக இருக்க மாட்டார்களோ என்ற சந்தேகத்திலேயே சிலருடைய தொகுதிகளை அதிமுக தலைமை கைவிட்டுவிட்டது; அல்லது வேட்பாளர்களை மாற்றிவிட்டது என்று கட்சிக்குள் முணுமுணுக்கிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடம் பெற்றுவரும் ஒரு கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கி அறிவிக்கப்படுகிறது; ஒவ்வொரு தொகுதியும் அறிவிக்கப்படும்போதே, ஒரேயொரு தொகுதியில்தான் வெற்றிக்கான வாய்ப்பு; பிற இடங்களில் எல்லாம் தோற்றுவிடும் என்று சுமாரான அரசியல் பார்வையாளர்களே அதிசயப்படுகின்றனர் (எப்படித் தேடிக் கண்டுபிடித்து இப்படியாகப்பட்ட தொகுதிகளை ஒதுக்குகிறார்கள்?).

திமுகவுடன் கூட்டணி முடிவான பிறகு, ‘எல்லாருக்கும் தொகுதிகளைக் குறைத்துக் கொடுக்கும்போது, உங்களுக்கு மட்டும் 10 தொகுதிகள் கிடைத்த ரகசியம் என்ன?’ என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா சொன்ன பதிலைத்தான் அனைவரும் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பாகக் குறைந்த தொகுதிக்காரர்கள் - “அவங்க எல்லாம் ரொம்ப நாளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்க இறுதியா வந்தவங்க. லேட்டா வந்தாலும்  லேட்டஸ்ட்டா வந்திருக்கிறோம். அதுதான் காரணம், வேறொன்றும் கிடையாது. நாங்கள் கடைசியாக இந்தக் கூட்டணிக்குள் வந்தோம்.”

(2021 - கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில் போட்டியிட்டு தேமுதிக வாங்கிய வாக்குகள் 0.43 சதவிகிதம்! அத்தனை தொகுதிகளிலும் பிணைத் தொகையை இழந்தது. ஆனால், அதே தேர்தலில் 183 தொகுதிகளில் போட்டியிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகள் 2.62 சதவிகிதம்!).

வாஸ்தவம். 2019-லிருந்து தொடர்ந்து திமுகவுடனேயே இந்தக் கட்சிகளும் தலைவர்களும் இருக்கிறார்கள். திமுகவின், திமுக அரசின் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு / ஆதரித்தும் வந்திருக்கிறார்கள் (இனி இவர்களால் எங்கே செல்ல முடியும்? என்ன சொல்ல முடியும்?). மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் சில தருணங்களில் முரண்பட்டிருக்கிறது. மற்றபடி அதிகபட்சமாக அறிக்கைகளைத் தவிர்த்து, அத்தனை விஷயங்களிலும் இந்தக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அரசை அனுசரித்தே நடந்து வந்திருக்கின்றன. இந்தக் கட்சிகள், அல்லது இவற்றின் தலைவர்கள், எந்தெந்தத் தருணங்களில், எந்தெந்த சம்பவங்களின்போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைப்பதற்குப் பதிலாக, போராட்டங்களுக்குப் பதிலாக, ‘பொத்தினாற்போல’ நடந்துகொண்டார்கள் அல்லது மௌனமாகக் கடந்துபோனார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

கூட்டணிக்குள்ளேயே தற்போது மிகவும் போராடிப் பெற்ற இந்த 5 – 5 - 8 – 4 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுகவினரும் வெற்றி பெறப் போகிறார்கள்? இவற்றின் மூலம் இந்தக் கட்சிகளுக்கு என்ன வாக்கு சதவிகிதம் கிடைக்கும் / அல்லது கணக்கிடப்படும்?

ரொம்ப நல்லவராக ‘கடமை’ எனக் கூட்டணியை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடாமல் விலகிவிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிட முடியும்? நிச்சயம் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துவிடும்; ஏனெனில், 10 தொகுதிகளில் போட்டியிடக் கிடைத்திருக்கிறது (அடுத்த தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு ‘லேட்டாக - லேட்டஸ்ட்டாக’ சென்றாலும் இன்னும் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறவும் முடியும்).

இனி வரும் தேர்தல்களில் இந்தத் தேர்தலில் பெற்ற – வாக்கு சதவிகிதங்களின் அடிப்படையில்தான்  5 – 5 - 8 – 4 கட்சிகளின் பலம் கணக்கிடப்படும்; அதற்கேற்பதான் போட்டியிடத் தேர்தலில் கூட்டணிகளால் தொகுதிகளும் ஒதுக்கப்படும் – கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அல்லது குறைக்கப்பட்டுக் காலப்போக்கில் மதிமுக கதையாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

இந்த 5 – 5 – 8 - 4 தொகுதிகளுக்காகத்தானா இவர்கள் அரசியல் (சர்வீஸ் செக்டாரா, இண்டஸ்ட்ரீஸ் செக்டாரா? பிஸினஸ் செக்டாரா? எந்த கேட்டகரியில் அரசியல் வரும்?)  செய்துகொண்டிருக்கிறார்கள்? இதேபாணி அரசியலை எவ்வளவு காலத்துக்கு இந்தக் கட்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும்? ஆக, முடிவாக இதனால் விளையப் போகும் பலன்தான் என்ன? இதைவிட்டால் வேறு வழியே இல்லையா? வெளியே வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் இந்தத் தலைவர்களுக்கெல்லாம்கூட இந்த வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது.

திமுக, அதிமுக உள்பட சில கட்சிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ‘வேட்பாளர் பற்றாக்குறை’ காரணமாக ஒரே கட்சியில் - ஒரே கூட்டணியில் தாயும் மகனும்கூட போட்டியிடுகிறார்கள். அல்லாமல் இரு கழகங்கள் உள்பட எல்லா கட்சிகளிலும் தாரை வார்க்கப்பட்ட –  கைமாற்றி விடப்பட்ட தொகுதிகளில் கண்ணுக்கெட்டிய வரை வாய்ப்பைக் காணாதவர்களும் தொண்டாற்றவே பிறந்தவர்களும் இனி தங்கள் தொண்டைத் தொடரப் போகிறார்கள். கமல்ஹாசனையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் போல அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அல்லது இடையில் வரக் கூடிய மக்களவைத் தேர்தலில் கிடைக்கக் கூடிய ஓரிரு இடங்களுக்காகக் கிளிகள் காத்திருக்க வேண்டியதுதான்!

[இலவு காத்த கிளிக் கதை தெரியாத இளைய தலைமுறையினர் தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு சொல்வதைத் தேடிக் கேட்டுக்கொள்ளலாம்]. 

summary

Regarding the situation of parties that are forced to contest with a limited number of seats allocated to them in the DMK alliance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.