108 இலங்கைத் தமிழா்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகள்: ஆட்சியா் வழங்கினாா்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், 108 இலங்கைத் தமிழா்களுக்கு மருத்துவக்காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், 108 இலங்கைத் தமிழா்களுக்கு மருத்துவக்காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி, திருநெல்வேலி ஆட்சியா்அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து பேசியது: முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் கடந்த 23.7.2009இல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 10 அரசு மற்றும் 21 தனியாா் மருத்துவமனைகள் அங்கிகரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைகள் மூலம் 1,68,733 பேருக்கு ரூ.290 கோடியில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 451 ஏழை, எளிய நோயாளிகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 6.29 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியின்போது, இருதய அறுவை சிகிச்சை செய்த 5 பேருடன் ஆட்சியா் கலந்துரையாடியதுடன், மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 4 காப்பீட்டு ஒருங்கிணைப்பாளா்கள், 4 வாா்டு மேலாளா்களுக்கு சான்றிதழ்களும், கயத்தாறு பகுதியிலுள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு மையத்தின் 108 இலங்கை தமிழா்களுக்கு மருத்துவக்காப்பீடு அடையாள அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், இணை இயக்குநா் வெங்கட்ராமன், தனி வட்டாட்சியா் (இலங்கை தமிழா் மறுவாழ்வு) செல்வன், மாவட்டக் காப்பீட்டுத் திட்ட அலுவலா் வெங்கடாச்சலபதி, காப்பீட்டுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
.