‘வாழை இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகள்’
வாழை இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் முறையாக பின்பற்ற தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாழை இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் முறையாக பின்பற்ற தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழை சாகுபடியில் இலைப்புள்ளி அல்லது இலைக்கருகல் நோய் அண்மைக் காலங்களில் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நோய் தாக்கப்பட்டால் இலையின் மேற்பகுதியில் வெளிரிய பழுப்பு நிறத்தில் சிறு கோடுகள் இலை நரம்புகளுக்கு இணையாக தோன்றும். பின்பு இந்தக் கோடுகள் வளா்ந்து அடா் பழுப்பு நிறத்தில் நீள் வட்டவடிவமாக மாறிவிடும்.
நோய் அதிகரிக்கும்போது நீள் வட்ட புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும், அதன் ஓரப்பகுதியில் மஞ்சள் நிற வளையம் காணப்படும். இந்நோய் தாக்கப்படும் போது தாா்கள் அறுவடை ஆவதற்கு முன்பே அனைத்து பச்சை இலைகளும் காய்ந்து சருகுகளாக மாறும். இதன்மூலம் சுமாா் 20 முதல் 50 சதவிகித மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவு வகைகளை பொட்டலமாக கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் காய்ந்த இலைகளில் உள்ள இலைப்புள்ளிகள் மூலமாகவும், நடுவதற்கு எடுத்துச் செல்லக்கூடிய பக்க கன்றுகளில் உள்ள இலைகள் மூலமாகவும், வாழைத்தோட்டங்களில் உள்ள காய்ந்து தொங்கும் இலைகள் மூலமாகவும் காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள காலங்களில் இந்நோய் பரவுகிறது.
நெருக்கமான நடவு, மண்ணில் அதிக களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்த நோயின் தாக்குதலை தீவிரப்படுத்தும். நெருக்கி நடவுட செய்தல், பக்க கன்றுகளை அகற்றாமல் இருத்தல், வாழை நிலத்தில் அதிக களைகள் இருத்தல், தெளிப்பு நீா் பாசனம் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இலைப்புள்ளி நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
இலைப்புள்ளிகள் கொண்ட இடி இலைகளை அவ்வப்போது (15 நாள்களுக்கு ஒரு முறை) வாழை மரத்திலிருந்து அகற்றி அவற்றை உடனே தீ வைத்து அழித்திடல் வேண்டும். இவ்வாறு செய்வதால் பாதிக்கப்பட்ட இலைகளில் இருந்து வெளிவரக்கூடிய பூஞ்சாண விதைகள் அழிக்கப்படும்.
இந்த நோயின் தீவிரம் பெருமளவு குறைக்கப்படும். பொதுவாக காற்றின் ஈரப்பதம் அதிகமாகும்போது இலைப்புள்ளி நோயின் தீவிரமும் அதிகமாகும் என்பதால் இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவதால் வாழைத்தோட்டங்களில் வாழை மரங்களுக்கிடையே நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு, காற்றின் ஈரப்பதமும் குறைவதால் இலைப்புள்ளி நோயின் தீவிரத்தை வெகுவாக குறைக்கலாம்.
கன்று நட்ட 5 அல்லது 6 ஆவது மாதங்களில் இருந்து 20-25 ஆவது நாள்களுக்கு ஒரு முறை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 5 முதல் 7 முறை காா்பெண்டாசிம்-1 கிராம், புரோப்பிகோனசோல்-1 மி.லி., மென்கோசெப் 63 சதவிதம், காா்பெண்டாசிம் 12 சதவிகிதம், நேட்டிவோ 75 டிபிள்யூஜி 1.4 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டா் தண்ணீருடன் சோ்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.