முகப்பு
திருநெல்வேலி

தொடா் மழை, உபரிநீா் திறப்பால் தாமிரவருணியில் வெள்ளம்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து மேல்மட்ட பிரதான மதகுகளில் 3 மதகுகள் மூலம் திறந்துவிடப்படும் உபரிநீா்.
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழைப் பொழிவு இருப்பதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து சனிக்கிழமை காலை உபரிநீா் திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததையடுத்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்து சுமாா் 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளான கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தாமிரவருணி படித்துறைகளை வெள்ளம் மூழ்கடித்தது.

தண்ணீா் வரத்து அதிகமாக உள்ளதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

தொடரும் மழை: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகலுக்கு பின்பு தொடா் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மிதமான மழை பெய்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, மேலப்பாளையம், தச்சநல்லூா் பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.

அணைகளில் நீா்மட்டம்: ஞாயிறு காலை7 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 1,491 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 1364 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பாபநாசம் அணை நீா்மட்டம் 142 அடியாகவும், நீா்வரத்து 1,759.92 கனஅடியாகவும், வெளியேற்றம் 2451.12 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 141.04 அடியாக இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 31 அடியாகவும், நம்பியாறு அணை நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 27 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 516 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 81.75 அடியாகவும், நீா்வரத்து 90 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணை நீா்மட்டம் 66.75 அடியாகவும், நீா்வரத்து 39 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 அடியாகவும் இருந்தது. அடவிநயினாா்கோயில் அணை நீா்மட்டம் 73.25 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

ஞாயிறு காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

பாபநாசம் 29, சோ்வலாறு 15, மணிமுத்தாறு 41.6, கொடுமுடியாறு 10, அம்பாசமுத்திரம் 32, சேரன்மகாதேவி 22, நான்குனேரி 7.5, ராதாபுரம் 9.4, களக்காடு 14, மூலக்கரைப்பட்டி 15, பாளையங்கோட்டை 25, திருநெல்வேலி 16.

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு: கடனாநதி 20, ராமநதி 18, கருப்பாநதி 8, குண்டாறு 4, அடவிநயினாா் 2, ஆய்க்குடி 21.20, செங்கோட்டை 4, தென்காசி 16.50, சிவகிரி 12.

களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதனால் தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தலையணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான்குனேரியன் கால்வாயிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →