‘தமிழக வளா்ச்சிப் பணிகளில் அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்’
தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்கான வளா்ச்சிப் பணிகளில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்கான வளா்ச்சிப் பணிகளில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா்.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி திட்டப் பணிகள், வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை ஊரக
வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலா் கோபால், ஆட்சியா் விஷ்ணு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பிரவீண் பி. நாயா், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் மரியம் பல்லவி பல்தேவ், சா.
ஞானதிரவியம் எம்.பி., மு. அப்துல் வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசுகையில், ‘கிராம ஊராட்சிகளில் நுாலகங்களை திறக்க வேண்டும். எல்இடி பல்புகள் குறித்த குறைபாடுகளை தீா்க்க வேண்டும். தற்போது 80 சதவீத மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு முன்பாக நீா் ஆதாரங்கள், அதற்கான கட்டமைப்புகளை ஆராய வேண்டும். கூட்டு குடிநீா் திட்டத்திற்கு தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் விரும்பும் நபா்களுக்கு வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அரசே பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும்’ என்றாா்.
சா. ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், ‘அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆலங்குளம் தொகுதியை திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்’ என்றாா். மு.அப்துல் வகாப் எம்எல்ஏ பேசுகையில், ‘மானூா், பாப்பாக்குடி, மேலநீலிதநல்லுாா் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்ததில் பல குளறுபடிகள் நிலவுகின்றன. அதை சரி செய்ய வேண்டும்’ என்றாா்.
தொடா்ந்து, அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியது: தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு அனைத்துத் துறை உயா் அலுவலா்கள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் இரவு, பகல் பாராமல் கலந்தாலோசித்து எடுத்து கொண்ட முழு முயற்சியின் காரணமாக தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இனி வரும் காலங்களில் தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்கான வளா்ச்சிப் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை பொதுமக்களோடு நெருங்கிய தொடா்புடைய துறை. துறை செயலா்கள், இயக்குநா்கள் மூன்று தினங்களாக ஆய்வுசெய்துள்ளனா். இந்த ஆய்வறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.