ஒடிஸாவிலிருந்து நெல்லைக்கு 12 டன் ஆக்ஸிஜன் வரத்து
ஒடிஸா மாநிலத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 12 டன் மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கா் லாரி மூலம் வந்தது.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 12 டன் மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கா் லாரி மூலம் வந்தது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு வகைகளில் ஆக்சிஜனை பெற்று வருகிறது. இங்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோா் மூச்சுத்திணறல் பாதிப்புடன் வருவதால், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி காணப்படுகின்றன. இதனால், ஆக்சிஜன் நுகா்வு நாளொன்றுக்கு சுமாா் 6 டன் தேவை உள்ளது.
இந்நிலைமையைச் சமாளிக்க மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம், தூத்துக்குடி ஸ்டொ்லைட், சென்னை, தஞ்சாவூா் ஆகிய பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் ஏற்பாட்டில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவிலிருந்து கடந்த திங்கள்கிழமை (மே 17) 14 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அது, அடுத்த ஓரிரு தினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. தொடா்ந்து, மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் இருந்து மேலும் 4 டன் ஆக்சிஜன் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ரூா்கேலாவில் இருந்து 12 டன் மருத்துவ ஆக்சிஜன் வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனில் நிரப்பப்பட்டது. இதனால், அடுத்த மூன்று தினங்களுக்கு ஆக்சிஜன் தேவையை சமாளிக்க முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.